டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு
- பேராசிரியர் ம.வே.பசுபதி
காப்பியங்கள்
சீவக சிந்தாமணி
திருத்தகு மாமுனிசெய் சிந்தாமணியும் அதற்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விருத்தியுரையும் அடங்கிய சீவக சிந்தாமணிப் பதிப்பை 1887ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார்.
உரையுடன் கூடிய பத்தொன்பது ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி உண்மையான பாடங்களைக் கண்டறிந்து இந்நூலை அச்சிட்டு உ.வே.சா. அவர்கள் தமிழுலகிற்குத் தந்துதவினார்.
1907ஆம் ஆண்டு இந்நூலை இரண்டாம் முறையாகப் பதிப்புச் செய்யும்போது மேலும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளியிட்டார். அதற்கிடையில் மேலும் பதினேழு ஓலைப் பிரதிகளைப் பார்வையிட்டு ஒப்பு நோக்கி முதற் பதிப்பைக் காட்டிலும் மிகு சிறப்பு வாய்ந்ததாக இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.
ஏடு பெயர்த்தெழுதுவோர் செய்த தவறுகள் சொல்லில் அடங்கா. அவற்றையெல்லாம் கண்டு பிடித்து உ.வே.சா. அவர்கள் முன்னுரையில் குறித்துள்ளார். கொழும்புத்துறை தி. குமாரசாமி செட்டியாரவர்கள் அளித்த ஓலைச்சுவடியின் இறுதியில் ‘இவ்வுரையாசிரியர்* கருத்தறியாது இக்காலத்தார் வேண்டாதவற்றிற்கு வேண்டுவனவாகக் கருதி எழுதிய இடை வசனங்கள், முடிக்கும் சொல்லோடு முடியாமையின் மிகையென்று விதப்புரைகளையும் லி நாட்டு வளங்களினும் நகர வளங்களினும், கதைகளினும் கூடிப் பாடியிட்ட பாட்டுக்களையும் லி பொருள் வேறுபாட்டானும் சொல் வேறுபாட்டானும் இலக்கண வழுவாலும் வாய்பாட்டின் பேதங்களானும் கண்டு அவற்றைத்தள்ளி எழுதின சிந்தாமணி உரை நச்சினார்க்கினியம் முடிந்தது’ என்றிருந்ததாம்.
இவ்வளவு வேலைகளையும் உ.வே.சா. அவர்கள் செய்தார். இடைச்செருகலான பாடல்களைக் களைந்தும், இடைச் செருகலான உரைத் தொடர்களைக் களைந்தும் செப்பம் மிக்க பதிப்புகளைத் தமிழுக்குத் தந்த பெருமை உ.வே.சா. அவர்களைச் சாரும். அதற்கு அவர் பட்ட இன்னல்கள் எண்ணிலாதன.
1922 ஆம் ஆண்டு இந்நூலை உ.வே.சா. அவர்கள் மூன்றாம் முறையாக வெளியிட்டார். இராண்டாம் பதிப்பில் சீவகசிந்தாமணி ‘ஆராய்ச்சி விளக்கம்’ என்ற பெயருடன் 41 பக்கங்களில் வெளியான பகுதி ‘ஒப்புமைப் பகுதிகள்’ என்ற பெயருடன் 113 பக்கங்களில் இப் பதிப்பில் வெளிவந்தது. பிரயோக விளக்கமும், விசேடக் குறிப்புகளும் இப்பகுதியில் சேர்க்கப்பட்டன.
சீவக சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையுடன் ஆய்ந்து பதிப்பிக்க உ.வே.சா. அவர்கள் பெரிதும் பாடுபட்டார். நச்சினிôர்க்கினியம் உரையில் நிறைய மேற்கோட் பாடல்கள் உள்ளன; அப்பாடல்கள் எந்வெந்நூல்களினின்றும் எடுக்கப்பட்டன என்ற குறிப்பும் இல்லை. அப்பொழுது பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய இலக்கியங்கள் ஏட்டுச் சுவடிகளாகவே இருந்தனவேயொழிய அச்சுவாகனம் ஏறவில்லை. உ.வே.சா. அவர்கள் உரைப் பகுதியில் உள்ள மேற்கோட் பாடல்களை எல்லாம் தனியாகத் தொகுத்து எழுதி மனப்பாடம் செய்து கொண்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று அங்கிருந்த பழைய இலக்கிய ஓலைச் சுவடிகளையெல்லாம், மகா சந்நிதானத்தைக் கேட்டுப் பெற்று வந்து படித்து நச்சினார்க்கினியர் தரும் மேற்கோட் பாடல்கள் எவ்வெந் நூலிலிருந்து கூறப்பட்டன எனக் குறித்துக் கொள்வார். ஒவ்வொரு மேற்கோளும் இன்ன நூலிலிருந்து தரப்பட்டது எனக் கண்டு பிடிக்கும் போதெல்லாம் ‘பெரிய புதையல் கிடைத்த மகிழ்ச்சி’ இவருக்கு ஏற்பட்டது.
நச்சினார்க்கினியர்.
1942ஆம் ஆண்டு சீவக சிந்தாமணிப் பதிப்பு, தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகு கீர்த்தியைப் பெற்றிறிருந்ததால் உ.வே.சா. அதனை நான்காம் முறையாகப் பதிப்பிக்கத் தொடங்கினார். ஆனால் அப்பதிப்புப் பாதி அச்சாகும் போதே உ.வே.சா. இறைவன் திருவடியை அடைந்ததினால் அன்னாரின் மகனாராகிய திரு. சா. கலியாணசுந்தரையர் அப்பணியைத் தொடர்ந்து முடித்து அவ்வாண்டிலேயே அந்நூலை வெளிக்கொணர்ந்தார்.
இந்நூலை பதிப்பிக்க ஓலைகள் தேடியது முதல் பதிப்பிக்கக் காரணமான நிகழ்ச்சிகள், இந்நூற் பதிப்பின் சிறப்புகள் முதலிய அனைத்துச் செய்திகளையும் இவர்தம் என்சரித்திரத்துள் கண்டறியலாம்.
சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகிய இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1892ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்புள், யார் எழுதியது என்று பெயர் தெரியாத அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் உண்டு. அடியார்க்கு நல்லார் உரை முதல் ஆறு காதைகட்கும், கானல் வரி நீங்கலாக அதற்குப் பின்னர் உள்ள 12 காதைகட்குமே உண்டு.
முதற்பதிப்புக்கு அரிதின் முயன்று 22 ஓலைச் சுவடிகளைத் திரட்டி ஒப்புநோக்கி ஆய்ந்தார். கானல் வரிக்கும் வழக்குரைத்த காதைக்கும் அடியார்க்கு நல்லார் உரை எழுதியிருப்பார் லி கிடைக்கவில்லை என்ற ஆய்வின் அடிப்படையில் தோன்றிய எண்ணத்தால், உ.வே.சா. தமிழகம் முழுதும் இருந்த புலவர்களின் வீடுகட்கெல்லாம் ‘யாத்திரை’ செய்தார். பாரீஸ் நகரத்துக் கையெழுத்துப் புத்தகசாலையிலும் அங்கிருந்த அன்பர்களைக் கொண்டு தேடச் செய்தார். இவ்வளவு முயன்றும் அப்பகுதிகட்கு அடியார்க்கு நல்லார் உரை கிடைக்காமல் பெருவருத்தம் கொண்டார்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்கட்கும் உ.வே.சா. அவர்கள் தாமே குறிப்புரை எழுதித் தம் பதிப்புடன் வெளியிட்டார். இக்குறிப்புரை முன்னையோர் உரை உள்ள பகுதிகளைப் பொருத்தமட்டில் அவ்வுரைகட்கு மாறுபடாததாகும்.
1920ஆம் ஆண்டும் 1927ஆம் ஆண்டுமாக இந்நூலை இவர் மேலும் இரு முறை பதிப்புச் செய்தார். இரண்டாம் முறை பதிப்புச் செய்யும் பொழுது மேற்கொண்டும் பல ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கினார். அவ்வோலைச்சுவடிகளிலும் முதற்பதிப்புக்குக் கிடைக்காத அடியார்க்கு நல்லாரின் உரைப்பகுதிகள் இல்லை.
சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் சைவர் என்பதற்கு இவர் நான்கு அகச் சான்றுகள் தந்துள்ளமை படித்துணரத்தக்கது. இளங்கோவடிகளைச் சமணராகவும் கருதலாம் என்பதற்கு மூன்று சான்றுகள் தந்துள்ளார். இச்சான்றுகளை இந்நூற் பதிப்பிலுள்ள இளங்கோவடிகள் வரலாறு என்ற தலைப்புள் குறிக்கிறார்.
சிலப்பதிகாரத்தாலும் அதன் உரையாலும் தெரியவரும் அரசர் பெயர் முதலியன, இளங்கோவடிகள் வரலாறு, சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம், அரும்பதம் முதலியவற்றின் அகராதி என்னும் இவர் பதிப்பின் பெருமையை உயர்த்தும் பகுதிகள் இப்பதிப்பிலும் உள்ளன. விளங்கா மேற்கோள் அகராதி எனக் காணப்பெறும் பகுதி இவர் தம் பெருந்தன்மையைச் சுட்டிக் காட்டும் சிறப்புப் பகுதி எனலாம்.
சிலப்பதிகார முதற் பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:
‘மேற்கூறிய பழைய பிரதிகள் பல, இனி வழுப்பட வேண்டுமென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அனேக வருஷங்களாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப்போரும் இல்லை யென்பதையும், நூல்களைப் பெயர்த்தெழுதித் தொகுத்து வைத்தலையே விரதமாகக் கொண்ட சில புண்ணியசாலிகளாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பிறழ்ந்துலிகுறைவுற்றும் பழுதுபட்டுப் பொருள் தொடர்பின்றிக் கிடந்த இப் பிரதிகளைப் பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ளம் உருகும்.’
இத்தொடர்களே இவர் இப்பதிப்புக்கு மேற்கொண்ட இன்னல்களைத் தெள்ளிதின் உணர்த்தும்.
மணிமேகலை
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையினை உ.வே.சா. அவர்கள் 1898ஆம் ஆண்டு வெளியிட்டார். 1891ஆம் ஆண்டு திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை மணிமேகலை மூலத்தை மட்டும் வெளியிட்டிருந்தார். அப்பதிப்பைக் கொண்டு நூலின் பொருளை அறிதல் மிகவும் கடினம். எனவே, ஆராய்ச்சி உரைகளுடனும் நூற்பொருளைத் தெள்ளிதின் உணரச் செய்யும் குறிப்புரையுடனும் இப்பதிப்பினை உ.வே.சா. வெளியிட்டார்.
இந்நூல் பௌத்த சமயச் சார்பானது ஆகையினால் மளூர் அரங்காசாரியார் அவர்களிடம் ஒன்றரை ஆண்டு காலம் நாடோறும் பௌத்த சமயம் பற்றிக் கேட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அன்றியும் இலங்கையிலிருந்த பௌத்த மத ஆசிரியரான சுமங்களர் என்பாரிடமும் பல கருத்துகளைக் கேட்டெழுதி அறிந்தார். ஒரு சமயத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளாமல் அச்சமயச் சார்பான நூலை வெளியிடக் கூடாது என்பது உ.வே.சா. அவர்களின் உயரிய கருத்து.
இந்நூலையும் உ.வே.சா. அவர்கள் தம் வாணாளில் மூன்று முறை பதிப்பித்தார். இராண்டாம் பதிப்பு 1921ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1931ஆம் ஆண்டிலும் வெளிவந்தது.
மணிமேகலைப் பதிப்பில் உ.வே.சா. செய்த சிறப்புகள். 1. இந்நூலில் தெரிந்த அரசர்களின் பெயர்கள் முதலியன (23 செய்திகளின் ஆய்வுத் தொகுப்பு) 2. மணிமேகலைக் கதைச் சுருக்கம் (முப்பது காதைகட்கும் உரைநடையில் சாரம்) 3. மேற்கோள்களுடன் கூடிய குறிப்புரை.
4. மணிமேகலைப் பிரயோக விளக்கம் (மணிமேகலை அடிகளை இன்னின்னார் இவ்விவ் விடங்களில் கையாண்டுள்ளனர் என்ற தொகுப்பு)
5. மணிமேகலையில் வந்துள்ள வேறு கதைகள். 6. புத்தருடைய பெயர்கள். 7. மறுப்புகள். 8. அரும்பத முதலியவற்றின் அகராதி. 9. மும்மணிகள் என்ற தலைப்பில் புத்த சரித்திரம், புத்த தர்மம், புத்த சங்கம்பற்றிய விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை (இது முதல் மூன்று பதிப்புக்களில்தான் இருக்கும். நான்காம் பதிப்பு முதல் இருக்காது.*)
இச்சிறப்புப் பகுதிகளுட் சில இரண்டாம், மூன்றாம் பதிப்புக்களிற் சேர்க்கப்பட்டவை. முதற் பதிப்பில் இருந்த அபிதான விளக்கம், அரும்பதவகராதி, அருந்தொடரகராதி, மூல விஷய சூசிகை, தமிழ் நூற்பெயர்கள் முதலியன லி என்பனவற்றையெல்லாம் ஒன்று திரட்டியதே இரண்டாம் பதிப்பு முதற்கொண்டு வெளிவந்த அரும்பத முதயவற்றின் அகராதி என்பது.
முதற் பதிப்பு வெளியிடப் பத்து ஓலைச் சுவடிகளை அரிதின் முயன்று பெற்று ஒப்பு நோக்கி ஆராய்ந்தார். இராண்டாம் பதிப்புக்கு மேலும் இரண்டு ஓலைச் சுவடிகளைப் பெற்று ஆராய்ந்து குறிப்புகள் சேர்த்தார்.
பெருங்கதை
உதயணன் என்பவனது வாழ்வு பற்றிய இந்நூலை உ.வே.சா. அவர்கள், தாம் எழுதிய குறிப்புரையுடன் 1920ஆம் ஆண்டு முதன் முறையாக வெளியிட்டார். இந்நூல் கொங்குவேளிர் என்பார் இயற்றியது. முதற் பதிப்பிலேயே நூலாசிரியர் வரலாறு, நூலைப் பற்றிய குறிப்புகள், அபிதான விளக்கம் (ஊர்ப் பெயர்கள், உறுப்பினர்கள் பற்றிய விளக்கம்) உதயணன் கதைச் சுருக்கம், அரும்பத முதலியவற்றின் அகராதி ஆகிய சிறப்புப் பகுதிகள் அமைக்கப்பெற்றன. 1935ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை இரண்டாம் முறையாகப் பதிப்பித்தார்.
* பௌத்த மும்மணிகள் எனத்தனியொரு நூலாக வெளியிடப்பெற்றது.
இந்நூற் பதிப்பின் முன்னுரையையொட்டி உ.வே.சா. அவர்கள் எழுதிய உதயணன் கதைச் சுருக்கம் 1926ஆம் ஆண்டு தனி நூலாகவும் வெளியிடப்பெற்றது.
பத்துப் பாட்டு நூலை அச்சிட எண்ணி உ.வே.சா. அவர்கள் ஓலைச் சுவடிகளைத் தேடியலைந்த காலத்தில் திருநெல்வேலி கவிராஜர் நெல்லையப்பப் பிள்ளை அவர்கள் இல்லத்தில் இருந்த ஓலைச்சுவடிகளையும் பார்வையிட்டார். நெல்லையப்பப் பிள்ளை வீட்டிலிருந்த ஓலைச் சுவடிகளில் ஒன்றன்மேல் ‘கொங்குவேள் மாக்காதை’ என்றிருந்தது. அதைப் பார்த்ததும் இலக்கணக்கொத்துப் பாயிர உரையில் சாமிநாத தேசிகர், ‘கொங்குவேள் மாக்கதை முதலிய நூல்களைக் கற்போர் வாணாளை வீணாளாக்குவர்’ என்ற பொருளுடன் எழுதிய தொடர் உ.வே.சா. அவர்களின் நினைவுக்கு வந்தது. அந்த நினைவும், அதனால் அவ்வோலைச் சுவடியைப் பெற்று ஆய்ந்ததன் பயனுமே இப்பதிப்பாக மலர்ந்தது.
உ.வே.சா. அவர்கள் இந்நூலின் ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது அவற்றில் க, ச, த, ப, ம, ய, ழ, வ, ல, ள, ன என்னும் எழுத்துகள் அனைத்தும் ஒரு வடிவிலேயே இருந்தனவாம். சொல் தொடர்ச்சியும், பொருள் தொடர்ச்சியும் நோக்கி, இன்னின்ன எழுத்துகள் இவ்விடங்களில் இருத்தல் வேண்டுமென ஊகித்து உறுதிசெய்துகொண்டு அமைத்தார். இன்னும் இவை போன்ற எண்ணற்ற இன்னல்கள் எய்தியே உ.வே.சா. அவர்கள் இப்பணியை முடித்தார்.
1935ஆம் ஆண்டு பெருங்கதை மூலம் குறிப்புரை மட்டும் அடங்கிய பெருங்கதைப் பதிப்பினை வெளியிட்டார்.
உதயண குமார காவியம்
இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன. இந்நூலுக்குக் குறிப்புரை எழுதி 1935ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இது கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 5) வெளிவந்தது.
இலக்கண நூற் பதிப்புகள்
புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் (மயிலை நாதருரையுடன்), நன்னூல் (சங்கர நமச்சிவாயருரையுடன்) தமிழ்நெறி விளக்கம் என்னும் இலக்கண நூல்களை உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.
புறப்பொருள் வெண்பா மாலை
சேரர் குலத்தவராகிய ஐயனாரிதனார் இயற்றிய இவ்விலக்கண நூலை முதன்முறையாக உ.வே.சா. அவர்கள் 1895ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த முதல் இலக்கண நூல் இதுவே. இந்நூல் பன்னிருபடலம் என்னும் இலக்கண நூலையொட்டி வழி நூலாக இயற்றப்பெற்ற புறப்பொருள் பற்றிய இலக்கண நூலாகும்.
புறப்பொருள் வெண்பாமாலை நூலுள் பன்னிரண்டு படலங்களும் ஓர் ஒழிபியலும் உள்ளது. ஒழிபியலுக்கு ஒரே ஒரு நூற்பா உண்டேயன்றித் துறையை விளக்கும் கொளு (புறச்செய்தி சொல்லும் இலக்கண நூற்பாவின் பெயர்கொளு என்பதாகும்) கிடையாது; உதாரணப் பாடல்கள் உண்டு.
11ஆவது படலமாகிய கைக்கிளைப் படலத்துறைவிளக்க உதாரணப் பாடல்கள் இருபத்தொன்றும் மருட்பா என்ற வகைப் பாடல்கள். எஞ்சிய, நூல் முழுதும் உள்ள துறை விளக்க உதாரணப் பாடல்கள் வெண்பாக்களே. எனவேதான் இந்நூல் வெண்பா மாலை எனப் பெயர்பெற்றது. இவ்வுதாரணப் பாடல்களும் ஆசிரியர் ஐயனாரிதனாராலேயே எழுதப் பெற்றவையாகும். கைக்கிளை என்னும் ஒருமருங்குபற்றிய காமத்தை மருட்பாவாலேயே எழுதவேண்டும். என்ற இலக்கண நியதி உள்ளமையின் ஆசிரியர் அப்படல உதாரணப் பாக்களை மட்டும் மருட்பாக்களாகவே அமைக்க வேண்டியதாயிற்று. எனினும் மருட்பாக்களின் இறுதி இரண்டடிகள்தாமே வேற்றுப்பாவாகிய ஆசிரியப்பாவாக அமையும்; முன்னிரண்டடிகளும் வெண்பா அடிகள்தாமே? சமநிலை மருட்பா என்ற வகைப்பாடல்களாக உள்ள பாடல்கள் முன்னிரண்டடி வெண்பாக்களாகவும், பின்னிரண்டடிகள் ஆசிரியப்பாவடிகளாகவும் அமையும் என்பது ஈண்டு நினைவுகொள்ளல் தகும்.
இந்நூற்பதிப்புச் செய்ய முதலில் உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்த ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை ஏழு. முதற் பதிப்பிலேயே பழையவுரை வெளியிடப்பெற்றது. ஆனால் அப்பொழுது அவ்வுரையை இயற்றியவர் யார் என்று விளங்கவில்லை. இரண்டாம் பதிப்பு 1915ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. இப்பதிப்பு வெளியிடுகையில் சேது சமஸ்தான வித்துவான் இரா. இராகவையங்கார் அவர்கள் புறப்பொருள் வெண்பா மாலைக்குக் கிடைத்துள்ள பழைய உரையின் ஆசிரியர் பெயர் சாமுண்டிநாயகர் என்பது எனத் தக்க ஆதாரங்களுடன் செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார். அக்கருத்தை உ.வே.சா. அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
இரண்டாம் பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதி சேர்க்கப் பெற்றது. 1924ஆம் ஆண்டு இந்நூலின் மூன்றாவது பதிப்பு உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பெற்றது. முதலிரு பதிப்புகளில் கண்ட விளங்கா மேற்கோளகராதியின் பெரும்பகுதி இப்பதிப்பில் குறைந்ததுடன் நூல் மிகத் தெளிவும் பொலிவும் பெற்றது.
1934ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை நான்காவது முறையாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பில் புறப்பொருள் வெண்பாமாலை லி பொருளமைப்பு என்ற பகுதியை எழுதிச் சேர்த்தார். இந்நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் இப்பகுதி பதினைந்து பக்கங்களில் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிய நடையில் விளக்குகிறது.
சாமுண்டி நாயகர் உரை முழுமையாகத் கிடைத்துள்ளமையின் உ.வே.சா. அவர்கள் தாமும் உரையெழுதாமல் இதனைப் பதிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்னூல் (மயிலைநாதர் உரையுடன்)
அகத்தியம், தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூல்களின் பிழியலாகச் சிறந்த இலக்கண நூலைத் தந்தவர் பவணந்தி முனிவர். இந்நூலுக்குள்ள உரைகள் பலவற்றுள் சங்கர நமச்சிவாயருரையும், அதையொட்டி விரிவுபடுத்தப்பட்ட சிவஞான முனிவர் விருத்தியுரையும், அண்மைக் காலத்ததாகிய ஆறுமுக நாவலர் காண்டிகையுரையும் இப்பொழுது செல்வாக் குள்ளனவாக இருக்கின்றன.
மயிலைநாதர் என்பவரால் இயற்றப்பெற்ற உரையே நன்னூலுக்கு முதலில் செய்யப் பெற்றதும் காலத்தால் பழமையானதுமாகும். பலரும் இவ்வுரையை வழக்கத்தில் கொள்ளாமைக்குக் காரணம், இவ்வுரையின் சில பல பகுதிகள் பிற்கால உரையாசிரியர்களால் மறுக்கப்பட்டமையே ஆகும். தமிழகத்தின் பழைய நிலை லி அக்காலத்துப் புலவர்களுடைய கோட்பாடுகள் லி முதலியன பற்றி அறிதற்கு இம்மயிலைநாதருரை பெரிதும் பயன்படுவதால், நன்னூலை இவ்வுரையுடன் உ.வே.சா. அவர்கள் 1918ஆம் ஆண்டு முதன் முறையாகப் பதிப்பித்தார்.
உரையாசிரியர்கள் தம் கருத்துக்கு ஒவ்வாத சில கருத்துக்களை மறுக்கும்போது, ‘இன்னார் எழுதிய கருத்தை மறுக்கிறேன்’ எனத் தம்மால் மறுக்கப்படுகிறவர் பெயரைக் குறிப்பிட மாட்டார்கள். இப்பழக்கத்தினாலே லி சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர் உரைகளைக் காணும்போது லி மறுப்புரைகளைக் கற்கும்போது லி நன்னூலுக்குக் காலத்தினால் முற்பட்ட உரையொன்று உண்டு என அறியலாமேயொழிய அவ்வுரை இன்னாரால் இயற்றப்பட்டது என அறியவியலாது. இதனால்தான், சங்கரநமச்சிவாயர், சிவஞான முனிவர் ஆகியவர்தம் உரைகளை நன்கு கற்றுத் தெளிந்த உ.வே.சா. அவர்களும் நன்னூலுக்குக் காலத்தால் முற்பட்டவுரையை எழுதியவர் யார்? அது கிடைக்குமா? என்ற ஐயமும் வருத்தமும் கொண்டார்.
1886ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் இல்லத்திற்குச் சென்று ஓலைகள் சிலவற்றை அவர்களில்லத்திலிருந்து எடுத்துப் படித்தபோது, நன்னூலுக்கு ‘இதுரை தாம் படிக்காத உரையடங்கிய ஓலை’ கிடைத்ததாம். அவ்வோலைச் சுவடியை உ.வே.சா. அவர்கள் அழகிய சிற்றம்பலக் கவிராயரைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார். பின்னர், பல இடங்களுக்கு நேரிற் சென்று இவ்வுரையடங்கிய ஓலைகளைப் பெற்றார். பலருக்குக் கடிதங்கள் எழுதியும் பலவகைகளால் முயன்றும் இவ்வுரையடங்கிய சில ஓலைகளைப் பெற்றார். இவ்வண்ணம் பெற்ற ஓலைகளில் சிலவற்றில் மட்டும், ‘மயிலை நாதருரை’ என்றிருந்ததாம். பின்னர் ஆராய்ச்சி தொடர்ந்து மயிலைநாதருரை அச்சேறியது.
இந்நூற் பதிப்பில் நூலாசிரியர் பவணந்தி முனிவர் வரலாறு, உரையாசிரியர் மயிலைநாதர் வரலாறு, நன்னூலை இயற்றுவித்தோனாகிய சீயகங்கன் வரலாறு ஆகியவற்றை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்தெழுதி வெளியிட்டுள்ளார். நூலாராய்ச்சியும் விரிவாகச்செய்து வெளியிட்டுள்ளார். அரும்பத முதலியவற்றின் அகராதியும் இப்பதிப்புக்கு உண்டு.
முதற்பதிப்பில் எங்குள்ளது எனத் தமக்கு விளங்காத மேற்கோள்களைத் திரட்டி மேற்கோளாகராதி என உ.வே.சா. வெளியிட்டிருந்தார். பதிப்பு வெளிவந்த பின்னர் காலப்போக்கில் அவற்றுள் பல எங்குள்ளன என உ.வே.சா. அவர்கட்கு விளங்கின; தன் கைப் பிரதியில் அவற்றை அவ்வப்போது குறித்து வைத்தார். அதனால் விளங்கா மேற்கோளகராதியை நீக்கி லி குறிப்புரைகளுடன் உ.வே.சா. அவர்களின் திருமகனார் சா. கலியாணசுந்தர ஐயர் அவர்கள் 1946ஆம் ஆண்டு இந்நூலை இரண்டாம் முறையாகப் பதிப்புச் செய்து வெளியிட்டார்.
நன்னூல் (சங்கர நமச்சிவாயர் உரையுடன்)
நன்னூலைச் சங்கர நமச்சிவாயருரையுடன் உ.வே.சா. அவர்கள் 1925ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்து அதிபராக இருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் உ.வே.சா. அவர்கட்கும் வேறு சிலருக்கும் இந்நூலைப் பாடம் சொன்னார்.
சங்கர நமச்சிவாயர் உரைக்குப் பிற் குறிப்பாகச் சிவஞான யோகிகள் ஓருரை செய்துள்ளார். அதுவே விருத்தியுரை என வழங்கப்படுகிறது. அஃது சங்கர நமச்சிவாயருரையுடன் இன்றியமையாத சிலவற்றைச் சேர்த்தும் மேற்படி உரையில் சிலவற்றைக் குறைத்தும் செப்பம் செய்யப்பட்டதாகும். சங்கர நமச்சிவாயருரையுடன் சேர்த்துப் பார்த்தால்தான் சிவஞான முனிவருடைய உரை விருத்தியுரையாகும். தனியாக அவருடைய உரையைமட்டும் பார்த்தால் அதனை இன்றியமையாத குறிப்புரை என்றே கூறவேண்டும்.
உ.வே.சா. அவர்கள் இந்நூற் பதிப்பை வெளியிடுவதற்கு முன்பு சிவஞான முனிவர் விருத்தியுரையுடன் கூடிய சங்கர நமச்சிவாயர் உரைப் பதிப்பு ஒன்று வெளிவந்திருந்தது. அதைக் கொண்டு சங்கர நமச்சிவாயர் எழுதிய உரைப் பகுதிகள் இவையென்றும், சிவஞான முனிவர் விருத்தி செய்த பகுதிகள் இவையென்றும் அறிந்து கொள்ள முடியாது. தாம் படித்த போது இவ்வேறுபாட்டை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் விளக்கமாகச் சொல்லியிருந்தமையால், உ.வே.சா. அவர்கட்கு அவ்வுரையில் இவ்விப்பகுதி இன்னின்னார் எழுதியது என்று தெரியும். அதனால் முதலில் சங்கர நமச்சிவாயருரையை மட்டும் பதிப்பித்துப் பின்னர்ச் சிவஞான முனிவர் உரையுடன் பதிப்பிக்க வேண்டும் என உ.வே.சா. கருதினார். இக்கருத்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் கூறியதால் விரிவுபட்டதேயாகும். தம் கருத்து உருப்பெறுவதற்கு முன்னர், சிவஞான முனிவர் உரையும் உள்ளிட்ட பதிப்பு வெளிவந்துவிட்டமையால், சிவஞான முனிவர் விருத்தியுரை இல்லாத லி சங்கரநமச்சிவாயருரை மட்டும் அடங்கிய பதிப்பை வெளியிடுவதினால் லி அவ்விருவரும் நன்னூலுக்குத் தனித்தனியே என்னென்ன செய்தனர் எனத் தமிழுலகம் அறிதற்கு ஏதுவாகும் எனத் தன் கருத்தைத் திருத்திக் கொண்டார். அதனடிப்படையில் உருப்பெற்றதே இப்பதிப்பாகும். இப்பதிப்பு வெளிவந்த பின்னர் தான் இவ்விப்பகுதிகள் சங்கர நமசிவாயர் எழுதியவை ; இவ்விப்பகுதிகள் சிவஞான முனிவர் எழுதியவை எனத் தமிழுலகம் தெளிவாக அறிந்தது.
இப்பதிப்பில் உ.வே.சா. அவர்கள் ஆங்காங்குக் குறிப்புரை எழுதியுள்ளார். அரும்பத முதலியவற்றின் அகராதி தொகுத்துத் தந்துள்ளார். இவ்வுரையாசிரியரின் கருத்துகளைப் பிறர் மறுத்துள்ள இடங்களைச் சுட்டி விளக்கங்களும் தந்துள்ளார்.
இப்பதிப்பில் நூலாசிரியர் வரலாறு, சீயகங்கன் வரலாறு, நூலாராய்ச்சி, உரையாசிரியர் வரலாறு ஆகிய பகுதிகளும் உள.
இந்நூலை 1935ஆம் ஆண்டு, இரண்டாம் முறையும் பதிப்பித்து வெளியிட்டார்.
தமிழ்நெறி விளக்கம்
இந்நூலை 1937ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்தார்.
இந்நூல் அகப்பொருள் பற்றி எழுதப்பட்ட முழுமையான இலக்கண நூலாதல் வேண்டும். ஆனால் கிடைத்துள்ளவை 25 நூற்பாக்கள் மட்டிலுமே. காலத்தினால் இவையும் அழிந்துபடாமற் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, உ.வே.சா. அவர்கள் இதனை வெளியிட்டார். கிடைத்த நூற்பாக்களுள் கடைசி நூற்பாவாகிய 25ஆம் நூற்பாவுக்கு உரை முழுதும் கிடைக்கவில்லை. உ.வே.சா. அவர்கள் 25 நூற் பாக்களுக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். இந்நூற் பதிப்பின் முன்னுரையுள் சிறந்த பல ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இந்நூல் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 7) வந்தது.
1947ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களின் திருமகனார் சா. கலியாண சுந்தரையர் அவர்கள் இந்நூலை மறு பதிப்புச் செய்து வெளியிட்டார்.
இடைக்காலப் பிற்கால இலக்கியப் பதிப்புகள்
உ.வே.சா. அவர்கள் 4 பிரபந்தத் திரட்டுகளையும், 6 கோவை நூல்களையும், 3 வெண்பா நூல்களையும், ஒரு பிள்ளைத் தமிழ் நூலி னையும், 2 பரணி நூல்களையும், 6 தூது நூல்களையும், 9 உலா நூல்களையும், ஒரு கலம்பக நூலினையும், 3 அந்தாதி நூல்களையும்,
மாலை நூற்பதிப்புகளையும், 2 மும்மணிக்கோவை நூல்களையும், 2 இரட்டை மணிமாலை நூல்களையும், 12 புராண நூல்களையும், பிறவகையான ஏழு நூல்களையும் (ஆக 58 நூல்களையும்) ஆராய்ச்சி செய்து இடைக்காலப் பிற்கால இலக்கியப் பதிப்புகளாக வெளியிட்டார்.
1878ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் திருவாவடுதுறையிலிருந்து பல புலவர்கள் பாடிய கவிதைகளைத் தொகுத்து ‘வேணுவனலிங்க விலாசச் சிறப்பு’ என்ற நூலை வெளியிட்டார். ‘வேணுவனம்’ என்பது திருநெல்வேலி. இந்நூலில் நெல்லையப்பரைப் பற்றிப் பல புலவர்கள் பாடிய பாக்கள் உள்ளன.
பிரபந்தத் திரட்டுப் பதிப்புகள்
ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ஸ்ரீதியாகராசச் செட்டியாரவர்கள் பிரபந்தங்கள், ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் என்னும் பிரபந்தத் திரட்டு நூல்களை உ.வே.சா. அவர்கள் தொகுத்து வெளியிட்டார்.
ஒரு புலவரின் இலக்கியங்கள் முழுவதையும் தொகுத்து இவ்வாறு திரட்டுநூல் அமைப்பில் தரும் பணி தொகுப்பவர்க்குக் கடினமானதாக இருந்தாலும் கற்பவர்க்கு மிக நலம் பயக்கக் கூடியதாகும்; ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவி நல்குவதாகும்.
அறிந்த நூல்களில் பெரும்பாலும் அச்சு வடிவில் வந்துவிட்ட இக்காலத்தில் இவ்வகையான திரட்டுப்பணி எளியதே. ஓலைகளில் ஆங்காங்குச் சிதறிக் கிடந்தவற்றைத் தொகுத்தது வியக்கத் தக்கதாகும். உ.வே.சா. அவர்கள் இவ்வண்ணம் பிரபந்தங்களைத் திரட்டியதோடு மட்டுமல்லாமல் அதன் பயனாகிய ஆராய்ச்சிகளையும் செய்து தந்திருப்பது நமக்கு மிகவும் உதவியாக உள்ளது.
மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளயவர்கள் பிரபந்தத் திரட்டு தம் குருநாதரின் பிரபந்தங்களைத் திரட்டி மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் 1910ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் தொகுப்பு இலக்கியமாக வெளியிட்டார்.
முதற்பதிப்பில் மகா வித்துவானுடைய முப்பத்தெட்டுப் பிரபந்தங்கள் இலங்கின. திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி முதற்பதிப்பில் முழுமையாக இல்லை; பாதியளவே உளது. முதற் பதிப்பிலேயே திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீசுப்ரமணிய தேசிகர் மீதான தனிப்பாடல்களும் திருமயிலைச் சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலையின் தனி விருத்தப் பாக்களும் உள்ளன.
1926ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரட்டின் இரண்டாம் பதிப்பில் திருப்பழைசைப் பதிற்றுப் பத்தந்தாதி முற்றுமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பதிப்பில் முதற்பதிப்பில் இல்லாத வேறு மூன்று பிரபந்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் மகா வித்துவான் பாடிய பொன்னூசல், லாலி, கப்பற்பாட்டு, மங்களம் ஆகிய பாடல்களும் இந்த இரண்டாம் பதிப்பில் சேர்க்கப் பெற்றவையே.
ஆக, இவ்வகையில் இப்பிரபந்தத்தில் அடங்கிய மகா வித்துவானுடைய பிரபந்தங்களின் பெயர்கள் வருமாறு:
1. திருத்துருத்திக் கச்சி விநாயகர் பதிகம்
2. திருத்துருத்தி சுப்பிரமணிய சாமி பதிகம்
3. திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப் பதிகம்
4. திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ்
5. திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்
6. உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்
7. திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
8. திருத்தவத்துறைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழ்
9. திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ்
10. ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத் தமிழ்
11. திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ்
12. வாட்போக்கிக் கலம்பகம்
13. திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரை அகவல்
14. திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் கலம்பகம்
15. சீகாழிக் கோவை
16. திருவிடை மருதூருலா
17. திருத்தில்லை யமகவந்தாதி
18. திருச்சிராமலை யமக வந்தாதி
19. துறைசை யமக வந்தாதி
20. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
21. திருக்குடந்தைத் திரிபந்தாதி
22. திருவிடைமருதூர்த் திரிபந்தாதி
23. பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
24. திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
25. திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி
26. பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
27. மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
28. மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆனந்தக் களிப்பு
29. திருக்கற்குடி மாமலை மாலை
30. கலைசைச் சிதம்பரேசுவரர் மாலை
31. திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை
32. திருவாவடுதுறை ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் மாலை
33. தருமபுரம் ஸ்ரீசச்சிதானந்த தேசிகர் மாலை
34. திருவாவடுதுறை ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
35. பட்டீச்சரப் புராணம்
36. திருவரன்குளப் புராணம்
37. திருப்பனந்தாள் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் சரித்திரம்
38. திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்
39. திருமயிலைச் சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை
40. மேற்படியூர் மாலையைச் சார்ந்த தனி விருத்தங்கள்
41. வியாசைக் கோவை
42. குளத்தூர்க் கோவை
43. புதுவை வித்துவான் சவராயலு நாயகர் மாலை.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்று உ.வே.சா. அவர்கள் தனியே வேறு நூல் எழுதிக்கொண்டிருந்தமையின் இந்நூற் பதிப்பின் முன்னுரையில் மகாவித்துவானைப்பற்றிக் குறிப்பாகவே எழுதியுள்ளார். அந்நூலைப்பற்றி உரைநடை நூல்கள் என்ற பகுதியில் காண்க.
கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
இப்தொகுப்பை உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இத்தொகுப்பில் கோடீச்சரக்கோவை, தஞ்சைப் பெருவுடையாருலா, ஸ்ரீசரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்னும் மூன்று பிரபந்தங்கள் உள்ளன. இம்மூன்றிற்கும் தனித்தனியே ஆராய்ச்சி நூன் முகங்களும் உ.வே.சா. அவர்கள் எழுதி அவ்வப் பகுதிக்கு முன் வெளியிட்டுள்ளார். இம் மூன்று பிரபந்தங்களுக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூற் பதிப்பில் முதலில் இடம்பெற்றுள்ள கோடீச்சரக் கோவைக்கு முன்னர் நூலாசிரியரின் வரலாறு, பொருள் தொடர்பு, ஆராய்ச்சி, கிளவிகளின் அகராதி, துறையகராதி என்ற சிறப்புப் பகுதிகளையும் எழுதி இணைத்துள்ளார். சரபேந்திரபூபால குறவஞ்சி நாடகத்திற்கு முன்னர் சரபோஜி மன்னர் வரலாறு உள்ளது.
இந்நூற் பதிப்பின் இறுதியில் அரும்பத முதலியவற்றின் அகராதியும், மேற்கோள் நூல்களின் அகராதியும் உள்ளன.
ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள்
இத்தொகுப்பை உ.வே.சா. அவர்கள் 1939ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். இத்தொகுப்பில் உள்ள ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் அருளிய நூல்களின் பெயர்கள் வருமாறு:
1. திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
2. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
3. மதுரைக் கலம்பகம்
4. நீதி நெறி விளக்கம்
5. திருவாரூர் நான்மணிமாலை
6. வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
7. சிதம்பர மும்மணிக்கோவை
8. சிதம்பரச் செய்யுட்கோவை
9. பண்டார மும்மணிக்கோவை
10. காசிக் கலம்பகம்
11. சகலகலாவல்லி மாலை
12. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
13. மதுரை மீனாட்சியம்மை குறம்
14. தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் உள்ள ஓலைச்சுவடிகளில் காணப்பெற்ற சில தனிப்பாடல்களும் இப் பதிப்பில் உள்ளன. உ.வே.சா. அவர்கள் எழுதிய ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும் இப்பதிப்பில் உண்டு. மேலும் 108 பக்கங்களில் குமர குருபரரின் பிரபந்தங்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியையும் எழுதி இப்பதிப்பின் முன்னர்ச் சேர்த்துள்ளமை பெரிதும் பயன் தருவதாகும். இப்பதிப்பில் உள்ள அனைத்து நூல்கட்கும் உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு. அவற்றைக் குறிப்புரை என்று உ.வே.சா. அவர்கள் கூறுதலால் இங்கும் அவ்வாறே எழுதவேண்டியுள்ளது. உண்மையில் அதனைப் பல இடங்களில் விரிவுரை என்றே கூறவேண்டியுள்ளது. இப்பதிப்பின் இறுதியில் அரும்பதம் முதலியவற்றின் அகராதியும் உண்டு.
|