முகப்பு
  உ.வே.சா வரலாறு
 
முற்கால இலக்கிய பதிப்புகள்
  உ.வே.சா பதிப்பித்த, எழுதிய நூல்கள்
 

நூல்நிலையம் பற்றிய தகவல்கள்

  உ.வே.சாவின் ஓலைச்சுவடிகள்
  பதிப்புகளும், வெளியீடுகளும்
 

விழாக்கள்

  நூலக ஒளிப்படங்கள்
 
 

எதிர்காலத் திட்டங்கள்

  முகவரி

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு
- பேராசிரியர் ம.வே.பசுபதி

கோவை நூற்பதிப்புகள்

சீகாழிக் கோவை, திருவாவடுதுறைக் கோவை, பழமலைக் கோவை, கலைசைக்கோவை, சிராமலைக்கோவை, திருவாரூர்க் கோவை, கோடீச்சரக் கோவை என்ற கோவை என்னும் வகை நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்.

கோவை என்பது அகப்பொருள் துறைகளுக்குக் கட்டளைக் கலித்துறை என்னும் வகைப் பாடல்களால் 400 பாடுவது. மேலும் பாடுதல் உண்டு. இதன் விளக்கம் உ.வே.சா. அவர்களின் கோவை நூற்பதிப்பு யாதானும் ஒன்றன் முன்னுரையில் காண்க.

திருக்கழுக்குன்றக்கோவை என்ற நூலை உ.வே.சா. அவர்கள் ஆங்காங்கு எழுதிய குறிப்புரைகளுடன் முற்றிலுமாகத் தாம் ஒரு குறிப்புரை எழுதி 1943ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களின் மகனார் திரு. எஸ். கலியாண சுந்தரஐயர் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.

சீகாழிக் கோவை

இக்கோவையை இயற்றியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ஆவார். 1860ஆம் ஆண்டு சீகாழியில் முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் முன்னிலையில் இந்நூல் அரங்கேற்றப்பெற்றது. இந்நூலுக்கு முன்சீப் வேதநாயகம்பிள்ளை அளித்த அரிய சாற்றுக் கவிகளும் உள. அச்சாற்றுக் கவிகள் இருபதில் யாதானும் ஒன்றைப் படித்துப் பார்த்தாலும் இந்நூலின் பெருமை புலப்படும். ஒரு பாடலைக் கீழே காண்போம்.
‘நல்லார்க்கு நல்லவனாம் மீனாட்சி சுந்தரவேள்
                        நவின்ற கோவை
             இல்லார்க்கு நிதி;துறவா வில்லார்க்கு விதி;புவிவாழ்(வு)
                        எல்லாம் நீத்த
             வல்லார்க்குத் திதி;ஞானம் கல்லார்க்கு மதி;வேலை*
                        வைய கத்தில்
             பல்லார்க்குக் கதி;புகலிப் பதியார்க்குத் துதி;அதன்சீர்
                        பகர்வார் யாரே!’

இப்பாடலுள், இந்நூல் நிதியாகவும், விதியாகவும், திதியாகவும், மதியாகவும், கதியாகவும், துதியாகவும் அமைந்துள்ள பாங்கு பாராட்டப்பெற்றுள்ளது.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் தாமெழுதிய குறிப்புரையுடன் 1903ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். சீகாழித் தலச்சிறப்பு, மூர்த்தி, தீர்த்தச் சிறப்புகள் ஆகியவற்றை முன்னுரையில் கொடுத்துள்ளார். முன்னுரைக்கு அடுத்து வேதநாயகம் பிள்ளையின் சாற்றுக் கவிகள் இருபதும் உள்ளன.

இந்நூலின் முன்னுரையில், மகாவித்துவான் இயற்றிய நூல்களில் தமக்குத் தெரிந்தவை எழுபது என்றும் அவற்றுள் தன்னாலும் பிற பலராலும் வெளியிடப் பெற்றவை முப்பது நான்கு என்றும் உ.வே.சா. அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இக்கோவையில் 531 செய்யுட்கள் உள்ளன.

* வேலை லி கடல்.

திருவாவடுதுறைக் கோவை

இந்நூலை இயற்றியவர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் ஆவர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்து முனிபுங்கவராய் இருந்தவர். மாதவச் சிவஞான முனிவரிடம் பயின்றவர்.

இந்நூல் துறைசைக் கோவையென்றும், ஐந்திணைக்கோவை யென்றும் பெயர் பெறும். இந்நூலை 1903ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் அரும்பதவுரை உண்டு. நூலாசிரியர் வரலாறு, நூலாராய்ச்சி ஆகிய சிறப்புப் பகுதிகளும் முன்னுரையை ஒட்டி உ.வே.சா. அவர்களால் எழுதி வெளியிடப் பெற்றுள்ளன.

இக்கோவையில் 457 செய்யுட்கள் உள்ளன.

பழமலைக் கோவை

இந்நூல் துறைமங்கலம் சாமிநாதைய தேசிகர் என்னும் வீர சைவக் கவிஞரால் இயற்றப்பெற்றது. பழமலைலிவிருத்தாசலம். இது பாடல் பெற்ற சிவத்தலம். இந்நூல் உ.வே.சா. அவர்களால் 1935ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிடப்பெற்றது.

கோவைகளின் இயல்பு, பழமலையின் பெருமை, நூலாசிரியர், நூலாராய்ச்சி முதலியவை அடங்கிய முன்னுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி உ.வே.சா. அவர்கள் இத்துடன் வெளியிட்டார். இக்கோவையில் 427 செய்யுட்கள் உள்ளன.

கலைசைக் கோவை

இந்நூலை இயற்றியவர் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் ஆவார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்து வித்துவான். கலைசை என்பது தொட்டிக்கலை என்ற ஊரைக் குறிக்கும் வேறு பெயர். இவ்வூர் சென்னை ஆவடிக்கு அண்மையில் உள்ளது.

இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் முதலியன அடங்கிய முன்னுரை, சுப்பிரமணிய முனிவர் வரலாறு, நூலாராய்ச்சி ஆகிய சிறப்புப் பகுதிகளுடன், நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதி உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1935ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக வந்தது.

இந்நூலில் 458 பாடல்கள் உள்ளன.

சிராமலைக் கோவை

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூல் திருச்சிராப்பள்ளி மலையில் உள்ள தாயுமானவரைப் பற்றிய இலக்கியம். இன்றைக்குச் சுமார் 250 ஆண்டுகட்கு முற்பட்டதாதல் வேண்டும்.

சிராமலைச் சிறப்பு, நூலாசிரியர் வரலாறு (பெயர் நீங்கலாக, காலம் முதலியவை பற்றிய ஆய்வு) நூலாராய்ச்சி ஆகிய கட்டுரைகளுடன் நூல் முழுமைக்கும் அரியதொரு குறிப்புரையும் எழுதி உ.வே.சா. அவர்கள் 1937ஆம் ஆண்டு இந்நூலை வெளியிட்டார். இதுவும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வந்தது.

இந்நூலின் முன்னுரையில் ‘யாவையும் பாடிக் கோவை பாடு’ என்று ஒரு பழமொழியை உ.வே.சா. அவர்கள் குறித்துள்ளார். மற்ற அனைத்து வகைப் பிரபந்தங்களையும் இயற்றித் தேர்ந்தவரே கோவை இலக்கியம் பாடவேண்டும் என்பது இதன் கருத்து. இது போன்ற இலக்கியத் தொடர்பான பழமொழிகளைப் புலவர்கள் இறவாமற் காத்துப் பயன்படுத்த வேண்டும்.

கோவைகள் நானூறும், நானூற்றுக்கு மேலும் பாக்கள் கொண்டனவாதலின் அவற்றிற்கு ‘நானூற்றுக்கோவை’ என்றே பெயருண்டு என்ற செய்தியையும் இந்நூற் பதிப்பில் உ.வே.சா. அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறான அறிவுக்கு விருந்தான பல கருத்துகளை உ.வே.சா. அவர்களின் பதிப்புக்களில் நாம் நிறையப் பெறலாம். சிராமலைக் கோவையில் 458 பாடல்கள் உள்ளன.

திருவாரூர்க் கோவை

இந்நூல் உண்ணாமுலை எல்லப்ப நயினார் என்பவரால் இயற்றப்பட்டதாகும். ஆறு பிரதிகட்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கி இந்நூலை 1937ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.

இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கட்கு விருப்பமான நூல் என்று உ.வே.சா. அவர்கள் இந்நூற் பதிப்பின் முன்னுரையிலும், தாம் இயற்றிய ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூலின் இரண்டாம் பாகத்திலும் குறித்துள்ளார். இந்நூலில் 514 செய்யுட்கள் உள்ளன.

இவர் வெளியிடுவதற்கு முன்பே ஆ.மே. சென்னகேசவலு நாயுடு என்பவர் இந்நூலைப் பதிப்பித்திருந்தார். அவர் 496 செய்யுட்களையே பதிப்பித்திருந்தமையால், இந்நூலில் உள்ள மேற்கொண்ட பாடல்களையும் சேர்த்து உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்தார். இச்செய்தியை இந்நூற் பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் குறித்துள்ளார்.

திருவாரூர்த் தலச் செய்திகள், எல்லப்ப நயினார், நூலாராய்ச்சி என்ற சிறப்புக் கட்டுரைகளுடன், நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதி இத்துடன் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டுள்ளார்.
பழனிப் பிள்ளைத் தமிழ்

இது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டதாகும். பிள்ளைத் தமிழ் நூல் நூறு பாக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்நூலுக்குரிய பாடல்களாக 31 பாடல்களே கிடைத்துள்ளன. நூல் முடிவதற்கு முன் ஆசிரியர் மறைந்தாரோ, அன்றி எழுதி வைத்த எஞ்சிய பகுதிகள் கிடைக்கவில்லையோ தெரியவில்லை. எஞ்சிய இம்முப்பத்தொரு பாடல்களும் வழக்கொழிந்து போகக் கூடாது என்பதற்காக உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு இதனைப் பதிப்புச் செய்து வெளியிட்டார். கிடைத்த பாடல்கள் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார். இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வந்தது..

வெண்பா நூற்பதிப்புகள்

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, சிவசிவ வெண்பா, திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, ஆகிய வெண்பா நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்து வெளியிட்டார். இலக்கியம் முழுவதும் வெண்பா யாப்பில் அமைந்தால் வெண்பா நூல் எனப் பெயர் பெறும். இஃது அந்தாதியாக அமையின் வெண்பா அந்தாதி எனப்பெறும்.

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா

இவ்வெண்பா நூலை இயற்றியவர் காஞ்சிபுரம் சபாபதி முதலியார். இந்நூலில் நூறு பாடல்கள் உள்ளன. முதல் ஐம்பது வெண்பாக்கள் சிலேடையின்றி உள்ளன. 51 ஆம் வெண்பாவும், 53 முதல் 89 முடிய உள்ள வெண்பாக்களும் இரு பொருட் சிலேடை கொண்டனவாக உள்ளன. 52ஆம் வெண்பாவும், 90 முதல் 95 முடிய உள்ள வெண்பாக்களும் முப்பொருட் சிலேடை கொண்டனவாக உள்ளன. 96 முதல் 100 முடிய உள்ள வெண்பாக்கள் நாற்பொருட் சிலேடை கொண்டவையாக உள்ளன.

இந்நூலின் ஆசிரியராகிய காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ஆசிரியர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சிலேடை வெண்பாவுக்குத் தலக் குறிப்பு விளக்கங்கள் அடங்கிய குறிப்புரை எழுதி உ.வே.சா. அவர்கள் 1933ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். நூலின் இறுதியில் அரியதோர் ஆராய்ச்சிக் குறிப்பும் வெளியிட்டார்.

சிவசிவ வெண்பா

இவ்வெண்பா நூலை இயற்றியவர் ஸ்ரீசென்னமல்லையர் என்பவர். இவர் சிதம்பரம் பச்சைக்கந்தையர் மடத்தைச் சார்ந்தவர். இவர் இந்நூலைக் கி.பி. 1767லி68இல் அரங்கேற்றினார்.

இவ்வெண்பா நூல் 133 பாடல்களைக் கொண்டது. இது திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தினின்றும் ஒவ்வொரு குறளைப் பின்னிரண்டடியாக அமைத்து, முன்னிரண்டடிகளில் அக்குறளுக்கு விளக்கமோ லி விளக்கக் கதையோ அமையப் பாடிய வெண்பா நூலாகும். இவ்வாறான திருக்குறள் விளக்க இலக்கியங்கள் பதின்மூன்றென்றும், அவற்றுள் கிடைப்பன பதினொன்றுதாமென்றும் உ.வே.சா. அவர்கள் இந்நூற்பதிப்பின் முன்னுரையில் விளக்கமாகக் குறித்துள்ளார்.

இந்நூலின் முதல் 98 செய்யுட்களுக்கு மட்டிலும் ஓருரை கிடைத்துள்ளது. அவ்வுரை ஒவ்வொரு வெண்பாவுக்கும் பின்னிரண்டடிகளாகிய திருக்குறளுக்குப் பரிமேலழகரின் உரையைக் கொண்டது. முன்னிரண்டடிகட்கே உரையாசிரியர் தம் உரையினைத் தந்துள்ளார். இவ்வுரையாசிரியர் யாரென்று தெரியவில்லை. ஒவ்வோர் உரைக்குக் கீழும் இன்னதிற்குப் பிரமாணம் இன்னதென்று மேற்கோள் செய்யுட்களை அவ்வுரையாசிரியர் தருவது சிறப்பாக உள்ளது. இவர்தம் உரை கிடைக்காத 99ஆம் செய்யுள் முதல் எஞ்சிய 35 வெண்பாக்களுக்கும் உ.வே.சா. குறிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூற்பதிப்பை உ.வே.சா. அவர்கள் 1938ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலின் மூலம் மட்டும் சோமேசர் முதுமொழி வெண்பா என்ற நூலுடன் சேர்த்து 1901ஆம் ஆண்டு சிதம்பரம் அ. இரத்தின சபாபதி என்பவர் வெளியிட்டிருந்தார். அப்பதிப்பு வெளிவந்து 37 ஆண்டுகள் ஆனமையாலும், அப்பதிப்பில் இல்லாத பழைய உரையொன்று கிடைத்தமையாலும், தாம் பல
ஏட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டுப் பாடபேதங்களைக் கண்டமையாலும், உ.வே.சா. இதனை மீண்டும் பதிப்பிக்க எண்ணி, எண்ணத்தை நிறைவேற்றினார்.

இந்நூற்பதிப்பு கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 8) வந்தது.
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
இவ்வெண்பா நூலை இயற்றியவர் திரிகூட ராசப்பக் கவிராயர் என்பவராவார். இந்நூல் 105 வெண்பாக்களைக் கொண்டது. 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ஆகிய பாடல்கள் நீங்கலாக எஞ்சிய அனைத்துப் பாடல்களும் சிலேடையாக அமைந்துள்ளன.

தல விசேடம், சிலேடை வெண்பாக்களின் வரலாறு, இந்நூல் பற்றிய விளக்கம், ஆகிய செய்திகளுடன் கூடிய முன்னுரையுடனும், நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும் 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை வெளியிட்டார்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாக வந்தது. வெளியீடு எண் 19.
பரணி நூற் பதிப்புக்கள் தக்கயாகப் பரணி, பாசவதைப் பரணி, என்ற இரு பரணி நூல்களையும் உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்தார்.

‘பரணி என்னும் பெயர்க் கராணம் பலவாறாகக் கூறப்படினும் காளியையும், யமனையும் தன் தெய்வமாகப் பெற்ற பரணி என்னும் நாண்மீனால் வந்த பெயரென்பதே பொருத்தமுடியதாகத் தோன்றுகின்றது’ என உ.வே.சா. அவர்கள் கூறுகிறார். இக்கருத்துக்கு அவர் ஆதாரமாகத் தருவது ‘காடு கிழவோள் பூத மடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப், பாகுபட்டது பரணி நாட் பெயரே’ என்னும் திவாகரத்தை. இத் திவாகரச் செய்யுள் பரணி நாட் பெயர்க்குக் காரணம் கூறுகின்றது.

தக்கயாகப் பரணி

இப்பரணி நூலை இயற்றியவர் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் பெருமான் ஆவார். இந்நூலுள் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, கோயிலைப் பாடியது, பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, கூழடுதலும் இடுதலும், களங்காட்டல், வாழ்த்து என்னும் பதினொரு பகுதிகள் உள்ளன. அவற்றுள் காளிக்குக் கூளி கூறியது என்பதே மிக விரிவான பகுதியாகும். கூளிலிபேய்.

இப்பரணி நூல் சிவபெருமானை அவமதித்துத் தக்கன் புரிந்த  வேள்வியை, வீரபத்திரக் கடவுள் அழித்ததையும், தக்கன் தலையை வெட்டியதையும் அவனுக்கு உதவி புரிய வந்தவர்களை வீழ்த்தியதையும் உணர்த்தும் வீரஞ்செறிந்த புராணக்கலப்புடைய இலக்கியமாகும்.

இந்நூலை டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1930ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். இப்பதிப்புச் செய்ய உ.வே.சா. அவர்கள் மூலமும் உரையும் கொண்ட ஐந்து ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கினார். பத்துப்பாட்டுப் பிரதியைத் தேடுவதற்குத் தருமபுர ஆதீனத்துக்குச் சென்றபோது உ.வே.சா. அவர்கட்கு இந்நூற் பிரதி ஒன்றும் கிடைத்தது. பின்னர் ஆய்வு தொடர்ந்தது. பணி முடிந்தது. பதிப்பு மலர்ந்தது.

இந்நூற் பதிப்பில் உ.வே.சா. அவர்கள் நூலாசிரியர் வரலாறு, நூலாராய்ச்சி, உரையாசிரியர் வரலாறு, இந்நூலை ஆக்குவித்தோனாகிய இரண்டாம் இராசராச சோழனின் வரலாறு, நூறு பக்கங்கட்கு மேற்பட்ட விரிவான அரும்பத முதலியவற்றின் அகராதி ஆகியவற்றை ஆய்ந்தெழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். 814 தாழிசைகளைக் கொண்ட இந்நூலின் சிறப்பை இப்பகுதிகள் நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. மூலம்மட்டும் உள்ள ஏட்டுச் சுவடிகளில் காணப்பெற்ற அதிகப்படியான நான்கு தாழிசைகளையும் நூலின் இறுதியில் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நூலாராய்ச்சி என்ற பகுதியுள் மற்றப் பரணிகளுக்கும், இதற்கும் உள்ள வேறுபாடுகள், சரித்திரத் தொடர்பான செய்திகள், நூலாசிரியர் கொள்கைகள், அரிய செய்திகள், புறப்பொருளமைதிகள், பொருளணிகள், சொல்லணிகள், தெய்வங்கள், வடமொழிப் பிரயோகங்கள், ஆக்கச் சொற்கள், முதலிய பல்வேறு செய்திகள் விரிவாக ஆராயப் பெற்றுள்ளன.

பாசவதைப் பரணி

இந்நூலை இயற்றியவர் இலக்கண விளக்க நூலின் ஆசிரியராகிய வைத்தியநாத தேசிகர் என்பது செவிவழிச் செய்தி. உ.வே.சா. அவர்கள் இந்நூற் பதிப்பின் முன்னுரையில் இந்நூலை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர்தாம் என்பதற்குத் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் எதிலும் சிறிதும் ஆதாரம் கிடைக்கவில்லை என்கிறார்.
இந்நூலில் 737 தாழிசைகள் உள்ளன. பரணியின் இலக்கணம், பரணி என்னும் பெயர்க் காரணம், பழைய பரணி நூல்கள், பரணிக்குரிய யாப்பு, பரணியின் உறுப்புகள் ஆகியவை பற்றியெல்லாம் இந்நூற்பதிப்பிலும் வெளியிட்டுள்ளார். இந் நூற்பதிப்பில் பாசவதைப் பரணி ஆராய்ச்சியும் உண்டு.

பல ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கிப் பாட பேதங்களையும் கண்டு வெளியிட்டுள்ளார். இந்நூலின் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.

நூலின் இறுதியில் அரும்பத முதலியவற்றின் அகராதியையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூல் 1933ஆம் ஆண்டு கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 2) வெளிவந்தது.

தூது நூற்பதிப்புகள்

கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டு விடுதூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது, ஸ்ரீ பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது, மான்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, புகையிலைவிடு தூது என்னும் தூது நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்புச் செய்து வெளியிட்டார்.
தூது இலக்கியம் மக்களுட் சிறந்தாரிடமாவது, தேவர், கடவுளர்களிடமாவது காமுற்ற தலைவி யாதானும் ஒரு பொருளாகத் தூதாகச் செல்ல வேண்டிக் கொள்வது போல இயற்றப்படும் இலக்கியம். தலைவன் தலைவியிடம் தூது விடுதல் சிறுபான்மை. இதன் விரிவு இலக்கணத்தை உ.வே.சா. அவர்களின் தூது நூற் பதிப்புள் யாதானும் ஒன்றன் முன்னுரையுட் காண்க.

கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது

இந்நூலை இயற்றியவர் கச்சியப்ப முனிவர் ஆவார். இவரையே மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தம் மானசிக வித்யா குருவாகக் கொண்டிருந்தார்களாம். நூல்கள் இயற்றும் போதும் பாடம் சொல்லும்போதும் பொருள் கூறுங்காலும் முட்டுப்பாடு நேர்ந்தால் இம்முனிவரைத் தியானித்தல் மகாவித்துவானுக்கு வழக்கமென்று உ.வே.சா. அவர்கள் இந்நூற்பதிப்பின் முன்னுரையில் குறித்துள்ளார்.

ஐந்து ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி உ.வே.சா. அவர்கள் இந்நூலின் மூலத்தை மட்டும் 1888ஆம் ஆண்டு முதன் முறையாகப் பதிப்புச் செய்து வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1931ஆம் ஆண்டு வெளிவந்தது. நூலின் சுருக்கம், நூல் முழுமைக்கும் குறிப்புரை முதலிய சிறப்புப் பகுதிகளுடன் அருஞ்சொல் முதலியவற்றின் அகராதியும் இந்நூற் பதிப்பில் உண்டு. இந்நூலில் 504 கண்ணிகள் உள்ளன.

மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூலைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி முன்னுரையும், தெளிவான குறிப்புரையும், ஆராய்ச்சிக் குறிப்பு என்ற சிறப்புப் பகுதியும் எழுதி 1930ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து வெளியிட்டார்.
இந்நூல் தமிழின் கீர்த்தியை முற்றிலுமாகக் கூறி இலக்கியங்கள், புலவர்கள் ஆகிய சிறப்புக்களையெல்லாம் அழகுபட நவில்கிறது. தமிழ்விடு தூது நூலில் 268 கண்ணிகள் உள்ளன.

பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது

இந்நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை ஆவார். பத்மகிரி என்பது மதுரை மாவட்டத்திலுள்ள திண்டுக்கல் என்ற தலத்தைக் குறிக்கும். இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு பதிப்பித்தார். தூது நூல்களைப் பற்றிய விளக்கம், நூல் ஆராய்ச்சி ஆகியவை பற்றி இப்பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார். முன்னுரையை ஒட்டி, ஆசிரியர் வரலாறு எழுதப் பெற்றுள்ளது. நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு.
இந்நூல் ‘கலைமகள்’ வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலில் 123 கண்ணிகள் உள்ளன.

மான்விடு தூது

இந்நூலை இயற்றியவர் குழந்தைக் கவிராயர் என்பவர் ஆவார். இவர் சிவகங்கைக்கு அண்மையிலுள்ள மிதிலைப்பட்டி என்ற ஊரினர். இந்நூல் சிவகங்கை சமஸ்தானத்தில் பிரதானியாயிருந்த முல்லையூர்த் தாண்டவராய பிள்ளை என்னும் வேளாளர்மீது பாடப்பட்டது.

குழந்தைக் கவிராயர், நூலாராய்ச்சி, தாண்டவராயபிள்ளை என்ற சிறப்பு ஆராய்ச்சிக் கட்டுரைகளுடனும், நூல் முழுமைக்கும் அரிய குறிப்புரையுடனும் 1936ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களால் இந்நூல் பதிப்பிக்கப்பெற்றது. இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 6) வந்தது. இந்நூலில் 301 கண்ணிகள் உள்ளன.

திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது
இந்நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை ஆவார். திருமாலிருஞ் சோலைமலை என்பது மதுரைக்கு அண்மையிலுள்ள வைணவத்தலம்.

இந்நூல் மூலம் மட்டும் 1905ஆம் ஆண்டு மு. வேணுகோபாலசாமி நாயுடு என்பவரால் அச்சிடப் பெற்றது. அப்பதிப்பில் பல கண்ணிகள் வேறுபட்ட பாடங்களும், பிழைகளும் கொண்டனவாக இருந்தமையால் உ.வே.சா. அவர்கள் திருத்தமுற மீண்டும் பதிப்பித்து வெளியிட வேண்டியதாயிற்று.

இப்பதிப்புச் செய்வதற்கு நான்கு ஓலைச் சுவடிகளை அரிதின் முயன்று தேடிப் பெற்று ஒப்பு நோக்கினார். ஆசிரியர் வரலாறும், 26 பக்கங்கள் கொண்ட விரிவான நூலாராய்ச்சியும் நூல் முழுமைக்கும் அரிய குறிப்புரையும், உ.வே.சா. அவர்கள் எழுதினார். இந்நூற் பதிப்பு 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதியும் உண்டு. இந்நூலில் 239 கண்ணிகள் உள்ளன.

புகையிலைவிடு தூது

இந்நூலை இயற்றியவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப் புலவரின் மகனாராகிய சீனிச்சர்க்கரைப் புலவராவார். இந்நூல் பழனியில் கோயில் கொண்டுள்ள முருகப்பெருமான்மீது காமுற்ற ஒரு தலைவி புகையிலையைக் தூதாக விடுத்ததாக அமைந்துள்ளது. பழனியாண்டவருக்குக் புகையிலைச் சுருட்டு நிவேதனம் உண்டாம். அதையொட்டியே இச்சிறு பிரபந்தம் தோன்றியிருக்க வேண்டும். இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1939ஆம் ஆண்டு பதிப்புச் செய்து வெளியிட்டார். இப்பதிப்பின் முன்னுரையில் நூலைப்பற்றிய ஆராய்ச்சியும், ஆசிரியரைப் பற்றிய செய்திகளும் உள்ளன.
இந்நூலில் 59 கண்ணிகள் மட்டிலுமே உள்ளன. இது மிகச் சிறிய பிரபந்தம். இதிலுள்ள 59 கண்ணிகளிலும் 53 கண்ணிகள் புகையிலையின் மகத்துவத்தைப் பறை சாற்றுவனவே. 54, 55, 56ஆம் கண்ணிகள் பழனியாண்டவரின் பெருமையைக் கூறுவன. 57, 58, 59ஆம் கண்ணிகளே தூது சென்றுவர வேண்டுவதாக அமைந்த கண்ணிகள் ஆகும்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாகவே (வெளியீடு எண் 12) வெளிவந்தது..

உலா நூற்பதிப்புகள்

திருக்காளத்தி நாதருலா, திருப்பூவண நாதருலா, தேவையுலா, திருவாரூர் உலா, மதுரைச் சொக்கநாதருலா, கடம்பர்கோயிலுலா, சங்கரலிங்க உலா, திருஇலஞ்சி முருகனுலா, திருக்கழுக்குன்றத்துலா, தஞ்சைப் பெருவுடையாருலா என்னும் உலா நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தார்.

உலா என்பது மக்களுட் சிறந்தோனாவது கடவுளாவது திருவீதியில் யானைமீதேறி வருங்கால் பரத்தையர் சேரியிலுள்ள ஏழு பருவத்துப் பெண்களும் நயந்ததாகப் பாடப்படுவதொரு பிரபந்தம். இதன் விளக்கங்களை உ.வே.சா. அவர்களின் உலா நூற்பதிப்புக்களின் முன்னுரைகளில் விரிவாகக் காணலாம்.

திருக்காளத்தி நாதருலா

 இந்நூல் சேறைக் கவிராசபிள்ளை இயற்றியது. ஆறு ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி, அரும்பதவுரையெழுதி, நூலாசிரியர் வரலாறு எழுதி 1904ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து வெளியிட்டார். மேலும் இரண்டு ஓலைப் பிரதிகளை ஒப்புநோக்கி, உயரிய ஆராய்ச்சிக் குறிப்புரை ஒன்றெழுதி 1925ஆம் ஆண்டு இந்நூலை இரண்டாம் முறையும் பதிப்பித்தார். முதற் பதிப்புக்காக ஆராய்ந்த ஆறு ஓலைச்சுவடிகளில் ஒன்றில் மட்டும் இந்நூல் ‘இரட்டையர்கள் இயற்றியது’ என்றிருந்ததாம். அக்கருத்தைக் தக்க ஆதாரங்களுடன் உ.வே.சா. மறுத்துள்ளார். சேறைக் கவிராசபிள்ளை பற்றிய வரலாற்று ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாகும். இந்நூலிலுள்ள கண்ணிகள் 578.
திருப்பூவண நாதருலா
இந்நூல் திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றியது. திருப்பூவணம் மதுரைக்குக் கிழக்குப் பகுதியில் அண்மையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலம்.

இவ்வுலா திருப்பூவை உலா எனவும் வழங்கப்பெறும். 1904ஆம் ஆண்டு முதன்முறையாக உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்பித்தார். உ.வே.சா. அவர்கள் நூல் முழுமைக்கும் அரும்பத உரை எழுதியுள்ளார். நூலாசிரியரின் வரலாற்றை ஆய்ந்து எழுதியுள்ளார். நூலின் சிறப்பு, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகள் முதலியவற்றை இந்நூற்பதிப்பின் முன்னுரையில் காணலாம். இந்நூலை இரண்டாம் முறையாக உ.வே.சா. அவர்கள் 1923ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
இந்நூலிலுள்ள கண்ணிகள் 469.

தேவையுலா

இந்நூல் பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை இயற்றியது ஆகும். தேவை என்பது இராமேச்சரத்தின் வேறு பெயர். இந்நூலை 1907ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார். இது மதுரைச் தமிழ்ச்சங்கப் பதிப்பாக வெளிவந்தது. இந்நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரையெழுதியுள்ளார்.

1925ஆம் ஆண்டு பல ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கி இந்நூலைச் சொந்தமாக உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இந்நூலின் கண்ணிகள் 360.
இந்நூலைப் பதிப்பிக்க வேட்கை தோன்றியதைப் பற்றி உ.வே.சா. அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:லி

‘இற்றைக்குச் சற்றேறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பு (1875 முன்பு) அன்பர்களுடன் நான் சேதுபுராணத்தில் பாலோடைச் சருக்கத்திற்குப் பொருள் கேட்டுக்கொண்டிருந்தபொழுது திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், 
‘மேலான கத்துருவின் வீழ், சலதோ டம்தணிக்கப்
பாலாவி யாகியபா லோடையும்’                                                (தே.உ.கண்ணி. 31)
என்பதைக் கூறி அதிலுள்ள ‘சலதோடம்’ ‘பாலாவி’ என்பவற்றைப் பலபடப் பாராட்டி, இது தேவையுலா என்றும், இதில் (தேவையுலாவில்) 24 தீர்த்தங்களும் இப்படியே ஒவ்வொரு நயம்படக் கூறப்பெற்றுள்ளன என்றும் சொன்னார்கள். அதுவே இந்நூலைத் தேடி ஆராய்ச்சி செய்யும்படி பண்ணுவித்தது.’

திருவாரூருலா

இந்நூலை இயற்றியவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் ஆவார். உ.வே.சா. அவர்கள் இந்நூலுக்கு அரும்பதவுரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் 1910ஆம் ஆண்டு இந்நூலை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் வெளியிட்டனர். இந்நூலிலுள்ள கண்ணிகள் 528.

மதுரைச் சொக்கநாதருலா

இந்நூல் புராணத் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்டது ஆகும். இந்நூலை 1931ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்புச்செய்து வெளியிட்டார். இந்நூற் பதிப்பில் மூர்த்தி, தலதீர்த்தச் சிறப்புக்களினை உ.வே.சா. அவர்கள் முன்னுரையில் தந்துள்ளார். அதையடுத்து நூலாசிரியரின் வரலாற்று ஆராய்ச்சியினைத் தந்துள்ளார். நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதியுள்ளார்.

இந்நூலின் கண்ணிகள் 516.

இந்நூலின் சிறப்பு, ஆலவாய்ச் சொக்கலிங்கப் பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் ஒன்பது பகுதிகளாக்கி, முதல் மூன்று திருவிளையாடல்களை முதற் பகுதியிலும், அடுத்து ஐந்து பகுதித் திருவிளையாடல்களைக் குழாங்கள் கூற்றிலும், ஒன்பதாவது பகுதியை (56 திருவிளையாடல்களை) எவ்வெட்டாக ஒவ்வொரு பருவத்திலும் அமைத்துப் பாடியிருப்பதாகும்.

கடம்பர் கோயில் உலா

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. பல ஓலைச்சுவடிகளைப் பரிசோதித்து மூலத்தைப் படியெடுத்து நூல் முழுமைக்கும் குறிப்புரை எழுதி 1932ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை வெளியிட்டார். தலவரலாறு, நூற்சிறப்பு முதலிய அரிய ஆராய்ச்சிச் செய்திகளை இப்பதிப்பின் முன்னுரையில் காணலாம். இதனை மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பதிப்புச் செய்தனர். இந்நூலில் உள்ள கண்ணிகள் 383.

சங்கரநயினார்கோயிற் சங்கரலிங்க உலா

இந்நூலை இயற்றியவரும் இன்னாரென்று தெரியவில்லை. சங்கரநயினார் கோயில் என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர். இந்நூலுக்கு வரராசை உலா என்றும் வேறு பெயர் உண்டு.
இந்நூலைப்பற்றியதொரு சிறந்த ஆராய்ச்சியுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி இந்நூலை 1933ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்புச்செய்து வெளியிட்டார்.

இந்நூலில் உள்ள கண்ணிகள் 312.

திருஇலஞ்சி முருகனுலா

இந்நூலை இயற்றியவர் மேலகரம் பண்டாரக் கவிராயர் என்பவர் ஆவார். இவர் திரிகூடராசப்பக் கவிராயரின் புதல்வர். இலஞ்சி என்பது திருக்குற்றாலத்துக்கு அண்மையிலுள்ள பாண்டிநாட்டுத் தலம்.
இந்நூலைப்பற்றிய ஆராய்ச்சி முன்னுரையுடனும், நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும் உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1935ஆம் ஆண்டு பதிப்புச்செய்து வெளியிட்டார். இந்நூலிலுள்ள கண்ணிகள் 460.

திருக்குழுக்குன்றத்து உலா

இந்நூலை இயற்றியவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் ஆவார். உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1938ஆம் ஆண்டு பதிப்புச்செய்து வெளியிட்டார். திருக்குழுக்குன்றத் தல வரலாறு என்ற கட்டுரையும், அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்ற கட்டுரையும், நூல்பற்றியதொரு ஆராய்ச்சிக் கட்டுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி இப்பதிப்பை வெளியிட்டுள்ளார். இந்நூலிலுள்ள கண்ணிகள் 404.

கலம்பக நூற்பதிப்பு

திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்

இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியத் தேவர் என்பவர் ஆவார். இவர் அகத்தியரின் மாணவரும், தொல்காப்பியம் என்னும் நூலைத் தந்தவரும் ஆகிய ஒல்காப் பெரும்புகழ், ஐந்திரமுணர்ந்த தொல்காப்பியனார் அல்லர்.

இத்தொல்காப்பியத் தேவர் இந்நூலை இயற்றுவதற்குக் காரணமான நிகழ்ச்சி பற்றித் தமிழ் நாவலர் சரிதையுள் ஒரு வரலாறு உண்டு. அதனை உ.வே.சா. அவர்கள் இந்நூற் பதிப்பின் முன்னுரையில் தந்துள்ளார். இந்நூலை 1918ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். 1919ஆம் ஆண்டு இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டபோது நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி வெளியிட்டார். 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை மூன்றாம் முறையும் பதிப்புச் செய்து வெளியிட்டார்.

குறவஞ்சி நூற்பதிப்பு

திருமலையாண்டவர் குறவஞ்சி

இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூலில் 89 பாடல்கள் முழுமையாகக் கிடைத்துள்ளன. 90ஆவது பாடலின் முதற்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. கிடைத்தவரை 1938ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார்.

90ஆவது பாடலில் கிடைக்காதது எனப்படுவது சிங்கனும் சிங்கியும் ஒருங்கே திருமலையாண்டவரை வாழ்த்தும் சுவையான பகுதியாக இருத்தல் வேண்டும்.

இந்நூலுக்கு உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு. இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 9) வெளிவந்தது..

விருத்தம் நூற்பதிப்பு

திருத்தணிகைத் திருவிருத்தம்

இந்நூல் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரால் இயற்றப் பெற்றதாகும். 100 பாடல்களைக் கொண்ட இந்நூலின் மூலம் மட்டும் 1914ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பட்டது. இது மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வந்தது. இதற்கு உயரிய குறிப்புரை எழுதி 1946ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களின் திருமகனார் வே. கலியாணசுந்தர ஐயர் வெளியிட்டுள்ளார்.

அந்தாதி நூற்பதிப்புகள்

திருமயிலைத் திரிபந்தாதி, மயிலை யமக அந்தாதி, சங்கரநயினார் கோயிலந்தாதி என்னும் அந்தாதி நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்து வெளியிட்டார். ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ, சீரோ, அசையோ அடுத்த பாடலின் முதலாக வரப்பாடும் ஒருவகைப் பிரபந்தத்தை அந்தாதி என்பர். இதன் இலக்கண விரிவை உ.வே.சா. அவர்களின் மேற் கூறிய மூன்று பதிப்பில் யாதானும் ஒன்றின் முன் பகுதியிற் காண்க.

திருமயிலைத் திரிபந்தாதி

இந்நூலை இயற்றியவர் இராமையர் என்பவர் ஆவார். இந்நூல் மாயூரம் என்னும் சோழ நாட்டூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றியது. 100 பாடல்களைக் கொண்டது. இந்நூலின் மூலத்தை மட்டும் உ.வே.சா. அவர்கள் 1888ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். 1930ஆம் ஆண்டு நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும், மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலியவை பற்றிய செய்திகளுடனும், நூலாராய்ச்சியுடனும் பதிப்பித்து வெளியிட்டார்; இவற்றை முன்னுரையில் காணலாம்.

சங்கரநயினார் கோயிலந்தாதி

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூல் பாண்டி நாட்டிலுள்ள சங்கரநயினார் கோயில் என்ற ஊரின் இறைவன்மேல் பாடப்பெற்றது. இந்நூலுக்கு கூழையந்தாதி என்றும், வரராசையந்தாதி என்றும் வேறு பெயர்கள் உள்ளன.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் உ.வே.சா. அவர்கட்கு இலக்கியப் பாடம் சொல்லி வருகையில் ஒருமுறை ‘இளந்தென்றலை’ என்று தொடங்கும் பாடலைச் சொல்லி நயங்களை விளக்கி, அப்பாடல் கூழையந்தாதியில் உள்ளதென்றும், அந்நூல் கிடைக்கவில்லை என்றும் வருந்திக் கூறினார்களாம். அதுமுதல் உ.வே.சா. அவர்கள் அவ்வளவு சிறந்த நூலை எப்படியும் பெற்றுப் படித்துச் சுவைக்க வேண்டுமென்று எவ்வளவோ முயன்று பார்த்தார். முயற்சி பலனளிக்காமற் போயிற்று. பிற்காலத்தில் ஒரு நாள் தாம் அரிதின் முயன்று பெற்று வைத்திருந்த ஓலைச்சுவடிக் கட்டுகளையெல்லாம் புரட்டும்போது ஒரு பெரிய ஓலைச்சுவடியின் மேல் ‘கருடத்துதி’ எனப் போடப்பட்டிருப்பதைக் கண்டார். ‘கருடத்துதி’ என்ற நூல் இவ்வளவு பெரிய கட்டாக இருக்க முடியாதே என்ற எண்ணத்துடன் அதனைப் புரட்டிப் பார்த்தார். உள்ளே உள்ள பாடல்களில் ‘கூழை’ என்ற சொல் பலவிடங்களில் வருதலைக் கண்டார்; மகிழ்ச்சி கொண்டார். கருடத் துதியோடு கூழையந்தாதியையும் சேர்த்துக் கட்டிய கட்டே அஃது என உணர்ந்தார். பின்னர் ஆய்வு தொடங்கியது; தொடர்ந்தது. நூலில் 98 பாடல்களும் 99ஆவது பாடலின் முதலடியும் மட்டிலுமே கிடைத்தது. பின்னர் முயன்று பார்த்தும் கிடைக்கவில்லை. ‘இது கூழைப் பெருமானுடைய (சங்கரநாராயணக் கடவுள்) அந்தாதியாகலின் கூழையாகவே (கூழைலிகுறைவு) கிடைக்கும்படி திருவருள் செய்வித்ததுபோலும்’ என்கிறார் உ.வே.சா.
கிடைத்த 98 பாடல்களில் மகாவித்துவான் கூறிய ‘இளந் தென்றலை’ என்று தொடங்கும் பாடல் இல்லை. 99ஆவது பாடலின் முதலடியும் இளந்தென்றலை என்று தொடங்கவில்லை. கிடைக்காத பாடலாகிய 100 பாடலாக அப்பாடல் இருக்குமென்றும் சொல்ல முடியாது. காரணம், அந்தாதி நூல்களில் கடைசிப் பாடலின் கடைசிச்சொல் முதற் பாடலின் முதற்சொல்லாக இருக்கும்; மகாவித்துவான் கூறிய இளந்தென்றலை என்று தொடங்கும் பாடலின் கடைசிச்சொல் ‘பொருளே’ என்பதாகும்; இந்நூலின் முதற்சொல் ‘பார்’ என்பதாகும்; எனவே இவை இரண்டு சொற்களும் ஒன்றாக அமையாமையின் இந்நூலின் இறுதிப் பாடலாகவும் மேற்படி பாடலைக் கொள்ள முடியாது.
அந்தாதி நூலை 1934ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் (கிடைத்தவரை) முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார். நூலின் முன்னுரையில் அரிய பல ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

‘இந்நூலை முற்றும் பெற்றுப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த என்னுடைய தமிழாசிரியர் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இதனைப் பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டாக்கி என்னை வருத்துகிறது’ என உ.வே.சா. அவர்கள் இந்நூல் முன்னுரையில் கூறியுள்ள தொடர் நம் நெஞ்சத்தைத் தொடுகிறது.

மாலை நூற்பதிப்புகள்

திருக்காளத்திநாதர் இட்ட காமிய மாலை
இதனை இயற்றியவரும் இன்னாரென்று தெரிந்து கொள்ளக்கூடவில்லை. நோய்வாய்ப்பட்ட அடியவர் ஒருவர் திருக்காளத்தியப்பரிடம் தம் குறைகளை நீக்கிக் காத்தருள வேண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது. உ.வே.சா. அவர்கள் 1938ஆம் ஆண்டு இந்நூலைப் பதிப்பித்தார். 32, 33, 34ஆம் பாடல்கள் நீங்கலாக 49ஆம் எண்ணுள்ள பாடல் வரையிலுமே கிடைத்ததால் அதுவரை வெளியிட்டுள்ளார். கிடைத்த இந்த 46 பாடல்களுக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.

இந்நூலும் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 10) வந்தது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் பாமாலை
இந்நூலை இயற்றியவர் நாராயணதீட்சிதர் என்பவர் ஆவார். இஃது ஒரு வைணவ இலக்கியம். இதில் 103 பாடல்கள் உள்ளன.

1939ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலை வெளிப்படுத்தினார். முன்னுரையில் நூலாசிரியரைப் பற்றிய செய்திகளை விரிவாக எழுதியுள்ளமையுடன், நூலாய்வும் செய்து வெளியிட்டுள்ளார். இதுவும் கலைமகள் வெளியீடாக (வெளியீட்டு எண் 11) வந்தது.

மும்மணிக்கோவை நூற்பதிப்புகள்

மதுரை மும்மணிக்கோவை, வலிவல மும்மணிக்கோவை ஆகிய மும்மணிக்கோவை நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆய்ந்து பதிப்பித்தார். மூன்று வகையான பாடல்களால் அந்தாதியாகப் பாடப்பெறுவது மும்மணிக்கோவை என்ற இலக்கியம். இதன் விரிவான இலக்கணத்தை வலிவல மும்மணிக்கோவை நூற் பதிப்பில் காணலாம்.

மதுரை மும்மணிக்கோவை

இம்மும்மணிக் கோவை நூல் பலபட்டடைச் சொக்கநாதபிள்ளையவர்களால் இயற்றப்பெற்றது ஆகும். இந்நூல் 1932ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களால் வெளியிடப்பெற்றது. நூல் பற்றிய செய்திகளை இந்நூற் பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்; முன்னுரைக்கு அடுத்து ஆசிரியரின் வரலாற்றை எழுதியுள்ளார். நூலில் உள்ள முப்பது பாடல்களுக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பதிப்பாக வெளிவந்தது.

வலிவல மும்மணிக்கோவை

இம்மும்மணிக் கோவையை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. வலிவலம் என்பது சோழ நாட்டில் மூவர் தேவாரங்களையும் பெற்ற தலங்களுள் ஒன்று.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1934ஆம் ஆண்டு பதிப்பித்தார். இந்நூற் பதிப்பின் முன்னுரையில் நூலின் வரலாறு, தலக் குறிப்பு, ஆகிய செய்திகளுடன் நூலாராய்ச்சியினையும் வெளியிட்டுள்ளார். இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. அப்பாடல்கள் அனைத்திற்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்நூல் கலைமகள் வெளியீடாக (வெளியீடு எண் 9) வந்தது.

இரட்டைமணி மாலை நூற் பதிப்புகள்

பழனி இரட்டைமணி மாலை, களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணி மாலை என்னும் இரண்டு இரட்டைமணி மாலை நூல்களையும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகைப் பாடல்களால் அந்தாதியாகத் தொடுக்கப்பெறும் இருபது பாக்கள் கொண்ட சிற்றிலக்கியமே இரட்டைமணி மாலை எனப்படும்.

பழனி இரட்டைமணிமாலை

இந்நூலை இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை. இந்நூல் பழனிமலையில் குடிகொண்ட இறைவனைப் பற்றியது. இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு பதிப்பித்தார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் குறிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூலும் கலைமகள் வெளியீடாகவே வெளிவந்தது.

களக்காட்டுச் சத்யவாசகர் இரட்டைமணிமாலை

நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஊர்களில் களக்காடு என்பது ஒன்று. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. களக்காட்டைச் சார்ந்த கைலாசநாத தேசிகரோ அன்றி அவர் மரபினரோ இந்நூலை இயற்றியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
இந்நூலின் இருபது பாடல்கட்கும் குறிப்புரை எழுதி உ.வே.சா. கலைமகள் அனுபந்தமாக வெளியிட்டார். அதுவே தனியாகவும் கலைமகள் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெற்றது.

புராண நூற்பதிப்புகள்

திருப்பெருந்துறைப் புராணம், வீரவனப்புராணம், சூசைமா நகர்ப் புராணம், தியாகராஜ லீலை, நம்பித் திருவிளையாடற் புராணம், தனியூர்ப் புராணம், திருக்காளத்திப் புராணம், விளத்தொட்டிப் புராணம், ஆற்றூர்ப்புராணம், மண்ணிப்படிக்கரைப் புராணம், தணிகாசலப் புராணம், வில்லைப் புராணம் என்னும் புராண நூல்களை உ.வே.சா. அவர்கள் ஆராய்ந்து பதிப்பித்தார்.

தம் ஆசிரியப் பெருந்தகையாராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைத் தியாகராசச் செட்டியார் அவர்களும் உ.வே.சா. அவர்களுமாகப் பதிப்பித்தனர். இப்பதிப்பு, சீவகசிந்தாமணி அச்சுவேலை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 1883ஆம் ஆண்டு வெளிவந்தது.

திருப்பெருந்துறைப் புராணம்

இந்நூல் 1656 பாடல்கள் கொண்டது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டது. திருப்பெருந்துறை என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் என்னும் சிவத்தலமாகும். இந்நூலை 1897ஆம் ஆண்டு முதன்முறையாகப் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம்பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆவுடையார் கோயிலைப்பற்றிய விசேடங்கள் அடங்கிய முகவுரையும், பாடல்களுக்கான அருஞ்சொல் அகராதியும் இப்பதிப்புகளில் உண்டு.

வீரவனப் புராணம்

இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் வடமொழியினின்றும் மொழி பெயர்த்தெழுதப்பட்டது. இந்நூலிலுள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 704. வீரவனம் என்பது திருப்பெருந்துறைக்கு (ஆவுடையார் கோவிலுக்கு) மேற்றிசையில் உள்ள சிவத்தலம். இத்தலத்திற்கு வீரவாரணியம், வீராரணியம், வீரை, வீரையூர், அளகை, சாக்கோட்டை, சாக்களூர், சாக்கை என்னும் வேறு பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் விசேடங்களுடன் மூர்த்தி, தீர்த்தம் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக இந்நூற்பதிப்பின் முன்னுரையில் உ.வே.சா. அவர்கள் வரைந்துள்ளார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்கள் அரிய குறிப்புரையையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1903ஆம் ஆண்டு இப்பதிப்பு வெளிவந்தது.

சூரை மாநகர்ப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. இந்நூல் பாண்டி நாட்டைச் சார்ந்த விசயாலயபுரம், சூரை என்றெல்லாம் பெயர் கொண்ட சூரைக்குடி என்னும் தலத்தைப் பற்றியது. இந்நூலிலுள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 539. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை முன்னுரையில் குறித்து நூல் முழுமைக்கும் அரும்பத உரையெழுதி 1904ஆம் ஆண்டு இந்நூலை உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்து வெளியிட்டார்.

திருவாரூர்த் தியாகராஜ லீலை

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றதே. தியாகராஜ லீலை என்னும் வடமொழி நூல் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் 360 லீலைகளை லி திருவிளையாடல்களை லி உணர்த்துவது. அவற்றுள் முதல் 13 லீலைகள், 14ஆம் லீலையின் முதற்பாகம்லிஆகியவற்றின் தமிழ் வடிவமே இந்நூல். வடமொழியின் எஞ்சிய பகுதி கிடைக்காமையால் மகாவித்துவான் இந்நூலை இத்துடன் முடித்தார். இந்நூலுக்குத் திருவாரூர்த் திருவிளையாடல் என்பதும் ஒரு பெயர். இந்நூலிலுள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 699. இந்நூலை 1845ஆம் ஆண்டு மகா வித்துவான் எழுதினார்.

இந்நூலுக்கு அரிய குறிப்புரை எழுதி விஷய சூசிகை (சிறப்புச் சொற் பொருளகராதி) தயாரித்து மூலத்துடன் 1905ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். முன்னுரையில் தலத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் காணலாம். இதன் இரண்டாம் பதிப்பு 1928இல் வெளிவந்தது.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

இந்நூல் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால் இயற்றப்பெற்றது. அதனால் இதனை நம்பி திருவிளையாடல் என்று கூறும் வழக்கமும் உண்டு. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற்கும் இது காலத்தால் முற்பட்டது. ஆதலால் இதனைப் பழைய திருவிளையாடல் என்றும் கூறுவர். இந்நூலை வேப்பத்தூரார் திருவிளையாடல் என்று கூறும் வழக்கமும் உண்டு. இந்நூலில் உள்ள செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 1753.

பதினோர் ஓலைப் பிரதிகளை ஒப்பு நோக்கி ஆராய்ந்து 1906ஆம் ஆண்டு முதன் முறையாக உ.வே.சா. அவர்கள் இந்நூற்பதிப்பை வெளியிட்டார். நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் சிறந்த குறிப்புரை உண்டு. இதன் இரண்டாம் பதிப்பு 1927ஆம் ஆண்டு வெளிவந்தது.

இந்நூல் இவ்வளவு சிறப்பும் நயமும் கொண்டதாக இருந்தும், இதுநாள் வரை இந்நூல் தமிழகத்தில் விளக்கம் பெறாமல் இருந்ததே எல்லா ஆச்சரியத்திலும் பெரியதோர் ஆச்சரியம் என உ.வே.சா. இந்நூற் பதிப்பின் முன்னுரையில் கூறுகிறார்.

பழைய திருவிளையாடற் புராண பயகர மாலையையும்* கடம்பவன புராணத்தின் ஒரு பகுதியும், திருவுசாத்தன நான்மணி மாலையும் இந்நூற்பதிப்பின் பிற்பகுதியில் அமைத்து வெளியிடப்பெற்றுள்ளன.

தனியூர்ப் புராணம்

இந்நூலை இயற்றியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களே. தனியூர் என்பது மாயூரத்திற்கு அண்மையிலுள்ள பாரிஜாத வனம் அல்லது புழுகீசம் என்னும் தலம். இந்நூலில் உள்ள திருவிருத்தங்களின் மொத்த எண்ணிக்கை 202. மூர்த்திதல தீர்த்தச் சிறப்புக் களடங்கிய முன்னுரையும் நூன் முழுமைக்கும் அரும்பதவுரையும் எழுதி இந்நூலை 1907ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்.

மண்ணிப் படிக்கரைப் புராணம்

இந்நூலை இயற்றியவரும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களே. மண்ணிப்படிக்கரை என்பது சோழநாட்டிலுள்ள ஒரு தலம். இந்நூலில் 20 படலங்கள் உள்ளன. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 501. தாமியற்றிய அரும்பத உரையுடன் உ.வே.சா. அவர்கள் இந்நூலை 1907ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.

திருக்காளத்திப் புராணம்

இந்நூல் ஆனந்தக் கூத்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1726. உ.வே.சா. அவர்கள் நான்கு ஓலைச்சுவடிகளை நன்கு ஆராய்ந்து இந்நூலைப் பதிப்பித்தார். மூன்று வடமொழி மூலங்களையும் இந்நூலை ஆராய்ச்சி செய்யுங்கால் உ.வே.சா. அவர்கள் கற்றுப் பயன்படுத்தினார். நூலாசிரியர், நூல், தலம் பற்றிய குறிப்புகள் யாவும் முன்னுரையில் உள்ளன. நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு. இப்பதிப்பு முதன் முறையாக உ.வே.சா. அவர்களால் 1912ஆம் ஆண்டு பதிப்புச் செய்யப்பெற்று வெளிவந்தது.

தலக்குறிப்பு முதலிய சிறப்புச் செய்திகளை இந்நூற்பதிப்பின் முன்னுரையுள் காணலாம். இந்நூலை 1913ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இரண்டாம் முறையாகவும் பதிப்பித்தார்.

விளத்தொட்டிப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றியதே. விளத்தொட்டி என்பது தஞ்சை மாவட்டம் குத்தாலத்திற்கு அண்மையிலுள்ள ஓரூர். இந்நூலிலுள்ள படலங்கள் 17. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 353. குறிப்புரையும் ஒவ்வொரு
படலத்துக்கு முன்னும் கதைச் சுருக்கமும் எழுதி 1934ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்புச் செய்து வெளியிட்டார். ஊர் பற்றியும், நூற் சிறப்புப் பற்றியும், இந்நூலை மகாவித்துவான் பாடியதற்குரிய காரணம் பற்றியும் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

ஆற்றூர்ப் புராணம்

இந்நூலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டதே. ஆற்றூர் என்பது தஞ்சை மாவட்டம் மாயூரத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் தென்கரையில் உள்ள சிவத்தலம். இந்நூலில் உள்ள படலங்கள் 14. பாடல்களின் மொத்த எண்ணிக்கை 525. நூல் முழுமைக்கும் குறிப்புரையும், ஒவ்வொரு படலத்துக்கு முன்னும் கதைச் சுருக்கமும் எழுதி 1935ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்து வெளியிட்டார். தியாகராச செட்டியார் இந்நூலுக்கு இயற்றிய சிறப்புப் பாயிரமும் இந்நூற் பதிப்பினுள் வெளியிடப் பெற்றுள்ளது. மூர்த்தி முதலியன பற்றிய சிறப்புச் செய்திகளை இந்நூற் பதிப்பின் முன்னுரையில் காணலாம்.

தணிகாசலப் புராணம்

இந்நூல் திருத்தணிகை கந்தப்பையர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் 18ஆம் நூற்றாண்டுப் புலவர். 14 பகுதிகளைக் கொண்ட இந்நூலின் மொத்தச் செய்யுட்கள் 426. நூலாசிரியர், தலம் முதலியவை பற்றிய விளக்கங்கள் கொண்ட முன்னுரையும், நூல் முழுமைக்கும் குறிப்புரையும் ஒவ்வொரு பகுதிக்கு முன்னும் கதைச் சுருக்கம் எழுதி 1939ஆம் ஆண்டு இந்நூலை உ.வே.சா. அவர்கள் பதிப்புச் செய்து வெளியிட்டார்.

வில்லைப் புராணம்

இந்நூல் வீரராகவ கவி என்பவரால் இயற்றப்பட்டது. இந்நூலிலுள்ள சருக்கங்கள் 9. செய்யுட்களின் மொத்த எண்ணிக்கை 4952. இந்நூல் புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள ‘வில்வ நல்லூர்’ என்னும் சிவத்தலத்தின் வரலாற்றை உரைப்பது. இத்தலம் இந்நாளில் வில்லியனூர் என்று வழங்கப்படுகிறது.

நூல் முழுமைக்கும் குறிப்புரையுடனும், ஒவ்வொரு சருக்கத்துக்கு முன்பும் கதைச் சுருக்கத்துடனும், சிறந்த ஆராய்ச்சி முன்னுரையுடனும் 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூற் பதிப்பின் முன்னுரையில் உள்ள உ.வே.சா.
எழுதிய சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள் வருமாறு:

‘வில்வ வனம் என்பது வில்லை எனவும் வழங்கும். வில்வ வனம் என்பது வில்ல வனம் ஆகி, அது மருவி வில்லையாயிற்று. இது தேவாரத்தில் வரும் வில்வேச்சரம் என்னும் வைப்புத் தலமாகும்.’
‘இத் தமிழ்ப் புராணம் வடமொழியிலுள்ள புராணத்திலிருந்து மொழிபெயர்க்கப்பெற்றது. இது காந்த புராணத்திலே நாகர கண்டத்துள் சொல்லப்பட்டதென்று இந்நூல் கூறும்.’

‘தமிழ்ப் புராணத்தின் ஆசிரியர் இன்னாரென்பது இந்நூற் சுவடிகளிலேனும், இந்நூற் செய்யுட்களிலேனும் காணப்படவில்லை. ஆயினும், இத்தலத்து முருகக் கடவுள் விஷயமாக அருணாசலக் கவி என்பவர் பாடிய ‘வில்லை முத்துக்குமாரர் பிள்ளைத்தமிழ்’ என்னும் பிரபந்தத்தில் அம்புலிப் பருவத்திலுள்ள எட்டாம் செய்யுளால் இப்புராணத்தின் ஆசிரியர் வீரராகவர் என்னும் பெயருடையார் என்று தெரிய வருகிறது..’