முகப்பு
  உ.வே.சா வரலாறு
 
முற்கால இலக்கிய பதிப்புகள்
  உ.வே.சா பதிப்பித்த, எழுதிய நூல்கள்
 

நூல்நிலையம் பற்றிய தகவல்கள்

  உ.வே.சாவின் ஓலைச்சுவடிகள்
  பதிப்புகளும், வெளியீடுகளும்
 

விழாக்கள்

  நூலக ஒளிப்படங்கள்
 
 
 

எதிர்காலத் திட்டங்கள்

  முகவரி

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு
- பேராசிரியர் ம.வே.பசுபதி

உரைநடை நூல்கள்

டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழுக்கு அரிய புதிய படையல்கள் பலவும் செய்துள்ளார். இவர் இதழ்களில் கட்டுரைகளாக எழுதியவை பல நூல் வடிவில் வந்துள்ளன. தனித்தும் சில நூல்கள் எழுதியுள்ளார்.

உ.வே.சா. அவர்களின் புதிய படையல்களைப் படித்தால், ‘பல நல்ல கருத்துகள் காலத்தினால் அழிந்து போகக் கூடாது’ என்ற துடிப்பால் எழுதப்பெற்றவை என்பது நன்கு புலனாகும். பல கட்டுரைகள் சங்க இலக்கியத் திறவுகோல்களாக அமைந்திருக்கும். இவருடைய நூல்கள் அனைத்தும் சிறுகதை படிக்கும் உணர்வையே நம்மிடம் ஏற்படுத்தும். படித்து முடிந்ததும் ‘பல புதிய நல்ல செய்திகளை நாம் தெரிந்து கொண்டோம்’ என்ற மகிழ்ச்சியையும் மன நிறைவையும் ஏற்படுத்தும். சிந்தனை ஓட்டங்களும், புதுக் கருத்துகளையும் தெளிவாக அமைக்கும் பாங்கும், உரைநடை இலக்கிய மறுமலர்ச்சிக்கும் இவர்தம் பங்கு அதிகம் என்பதைப் பகர்கின்றன. சில சாதாரணச் செய்திகளை இவரெழுதும்போதும் அவற்றில் புதுமைப் பொலிவும் கருத்தாழமும் அமைகின்றன.

மத்தியாச்சுன மான்மியம், பௌத்த மும்மணிகள், மணிமேகலைக் கதைச் சுருக்கம், உதயணன் கதைச் சுருக்கம், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம் (இரண்டு பாகங்கள்), கோபாலகிருஷ்ண பாரதியார், கிருஷ்ணையர், மகாவைத்யநாதையர், நான் கண்டதும்கேட்டதும், நல்லுரைக்கோவை (நான்கு பாகங்கள்), பழையதும் புதியதும், நினவு மஞ்சரி (இரண்டு பாகங்கள்), திருவள்ளுவரும் திருக்குறளும், தமிழ்ப்பா மஞ்சரி என்னும் புதிய படையல்கள் தமிழுக்கு இவரால் படைக்கப்பெற்ற புதிய நூல்களாம்.

ஆனந்த விகடன் என்னும் இதழில் உ.வே.சா. அவர்கள் தொடர்ந்து எழுதி வந்த ‘என் சரித்திரம்’ என்ற தம் வாழ்க்கை வரலாற்றின் தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு திரு. சா. கலியாணசுந்தரையர் அவர்களால் 1956ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. உ.வே.சா. அவர்கள் மணிமேகலை நூல் வெளியிட்டவரை உள்ள வாழ்க்கை அளவுதான் இந்நூலால் நாம் அறிய முடியும். அதாவது 1898ஆவது ஆண்டு வரை வாழ்ந்த வாழ்வே இச்சரித்திரத்தால் நாம் உணர முடிகிறது. உ.வே.சா. அவர்கள் அவ்விதழுக்கு அக்கட்டுரையை மொத்தமாக எழுதித் தரவில்லை. அவ்வப்போது எழுதித்தந்தார். எனவே அவர்தம் மறவுக்குப்பின் அக்கட்டுரை தொடர்ச்சி இல்லாமற் போயிற்று. இது நம் தவக் குறைவாலேயேயாகும். என்சரித்திர நூலினை ஓரளவு சுருக்கி வெளியிட்டால் தமிழகத்துக்கு மிகவும் பயன்படும் என்ற எண்ணத்தில் 1958ஆம் ஆண்டு, உ.வே.சா. அவர்களின் பேரராகிய திரு.க.சுப்பிரமணிய ஐயர், பி.ஏ. அவர்கள் என்சரித்திரம் (சுருக்கம்) என வெளியிட்டார். இவ்வண்ணம் வெளிவருதற்கு என்சரித்திர நூலைச் சுருக்கித் தந்தவர் கலைமகள் ஆசிரியர். வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜகந்தாதன் அவர்கள் ஆவர்.

கலைமகள் என்னும் உயரிய திங்களிதழில் வெளிவந்த ‘பூண்டி அரங்கநாத முதலியார்’ என்ற தொடர்க் கட்டுரை 1927ஆம் ஆண்டு, அவ்விதழாசிரியரால் நூலாக வெளியிடப்பெற்றது.

மத்தியார்ச்சுன மான்மியம்

இந்நூலை 1886ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் எழுதி வெளியிட்டார். இந்நூல் மத்தியார்ச்சுனம் என்னும் திருவிடைமருதூரின் தல புராணமாகும். இத்தலத்தின் அனைத்துவகைச் சிறப்புகளையும் இந்நூலில் உ.வே.சா. அவர்கள் எளிய இனிய உரைநடையில் அமைத்துள்ளார். ‘ஏகநாயகர் ஊசல்’ என்ற தலைப்பில் பத்து விருத்தங்களையும், ‘ஏகநாயகர் தாலாட்டு’ என்ற தலைப்பில் முப்பது கண்ணிகளையும் இயற்றி இந்நூலின் பிற்பகுதியில் சேர்த்துள்ளார். திருவிடைமருதூர்க்குரிய தேவாரப் பதிகங்கள் நூலின் முன்புறத்தில் அணி செய்கின்றன.

பௌத்த மும்மணிகள்
இந்நூலின் விரிவுப் பெயர் ‘பௌத்த சரித்திரம் பௌத்த தருமம் பௌத்த சங்கம்’ என்பதாகும். இந்நூலை 1898ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார். மணிமேகலையைப் பதிப்பிக்கும்போது, அது பௌத்த காப்பியமாதலால், பௌத்த சமயச் செய்திகளையெல்லாம் ராவ்பகதூர் மளூர் அரங்காசாரியார் அவர்களுடன் உ.வே.சா. அவர்கள் ஓராண்டு காலம் நாடோறும் சென்று ஆராய்ந்தார். அக்காலத்தில் ஆராய்ந்த செய்திகளையெல்லாம் திரட்டி, மணிமேகலைப் பதிப்பின் முன்னுரையை யொட்டி இப்பெருங்கட்டுரையை வெளியிட்டார். பலரின் வேண்டுகோட்கிணங்க இது தனி நூலாகவும் பதிப்பிக்கப் பெற்றது. உ.வே.சா. அவர்களின் வாணாளில் இந்நூல் ஆறுமுறை பதிப்பிக்கப் பெற்றது.

மணிமேகலைக் கதைச் சுருக்கம்

மணிமேகலை நூற்பதிப்பின் முன்னுரையை ஒட்டித் தரப்பெற்ற மணிமேகலைக் கதையை இலக்கிய நயங்களையும் உணரும் வண்ணம் ஆக்கி உ.வே.சா. அவர்கள் 1898ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் 1941 ஆம் ஆண்டு வரை உ.வே.சா. அவர்கள்தம் வாணாளில் பத்துமுறை பதிப்பிக்கப் பெற்றது.

உதயணன் கதைச் சுருக்கம்

உ.வே.சா. அவர்கள், பெருங்கதை என்னும் நூலினைச் சுருக்கி உரைநடையில் இந்நூலை எழுதி 1926ஆம் ஆண்டு வெளியிட்டார். பெருங்கதையின் ஆறு காண்டங்களையும் 203 பக்கங்களில் சுருக்கி எழுதியுள்ளார். 204ஆம் பக்கம் முதல் 236ஆம் பக்கம் வரை பெருங்கதையின் உறுப்பினர்களைப் பற்றிய குறிப்புக்கள் எழுதப் பெற்ற அபிதான விளக்கம் என்ற பகுதி உள்ளது. 237ஆம் பக்கம் முதல் 266ஆம் பக்கம் வரை அரும்பதங்களின் குறிப்புரை தந்துள்ளார். இந்நூலில் மூல நூலாகிய பெருங்கதையின் சுவையான அடிகள் பலவற்றையும் விளக்கியுள்ளார்.

சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
இந்நூல் 1927ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய பத்துச் சொற்பொழிவுகளின் சுருக்கமாகும். 1926ஆம் ஆண்டே உ.வே.சா. அவர்களைச் சென்னைப் பல்கலைக் கழகத்தினர் இவ்வாறு தொடர்ச் சொற்பெருக்காற்றுமாறு வேண்டினர். அது சமயம் உ.வே.சா. அவர்கட்கு உடல்நிலை சரியின்மையால் அந்த ஆண்டு பேச இயலாமற் போயிற்று. மீண்டும் மீண்டும் தொடர்ச் சொற்பெருக்காற்றுமாறு உ.வே.சா. அவர்களைச் சென்னைப் பல்கலைக் கழகத்தினர் வற்புறுத்தினமையால் அடுத்த ஆண்டாகிய 1927ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் இசைந்து பத்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

பத்துச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுருக்கி வெளியிடப்பட்ட நூலே சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற நூலாகும். இந்நூலை உ.வே.சா. 1929ஆம் ஆண்டு வெளியிட்டார்.

ஸ்ரீமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (முதல் பாகம்)

மகாவித்துவான் அவர்கள் 1815ஆம் ஆண்டு முதல் 1876ஆம் ஆண்டு வரை அறுபத்தொரு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழ் உலகிற்கு அளப்பரும் தொண்டுகள் ஆற்றிய கல்விக்கடல் ஆவார். இக்கல்விக் கடலின் வாழ்வுபற்றியதே இந்நூல். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் ‘முன்னோரும் தந்தையாரும்’ என்பது முதல் ‘புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்’ என்பது முடிய 24 கட்டுரைகளைக் கொண்ட 356 பக்க அளவுடையது இந்நூல். இம்முதல்பாகத்துள், உ.வே.சா. அவர்கள் மகாவித்துவானிடம் கல்விகற்கச் செல்வதற்குமுன் உள்ள வரலாறுகள் உள்ளன. இந்நூலின் முன்னுரையாக உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள பகுதி மிக உருக்கமானது. நூலின் இறுதியில் சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி உள்ளது.

இந்நூலை எழுத உ.வே.சா. அவர்கள் முதன் முயற்சி மேற்கொண்ட ஆண்டு 1900. இந்நூல் முழுமை பெற்று வெளிவந்த ஆண்டு 1933 ஆகும். இவ்வளவு இடைவெளி ஏற்பட்டமைக்குக் காரணம் ‘செய்வன திருந்தச்செய்’ என்ற முறையில் நூல் தரமான ஆதாரமுள்ள கருத்துகள் கொண்டதாக வெளிவரவேண்டும் என உ.வே.சா. அவர்கள் கருதிய உயரிய கருத்தே ஆகும்.

1900ஆம் ஆண்டு, சுதேசமித்திரன் இதழில் மகாவித்துவான் அவர்களின் வரலாற்றை அப்பொழுது தெரிந்த செய்திகளைக் கொண்டு சுருக்கமாக எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையின் இறுதியில் மகாவித்துவானின் சரித்திரத்தைத் தாம் விரிவாக எழுதவிருப்பதாகவும், அவர் வாழ்வுக் குறிப்புகளை அறிந்தவர்கள் தெரிவித்துதவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். சிலரே அவ்வேண்டுகோட்குச் செய்திகள் விடுத்தனர். பலர் நம்பத்தகாத பல கதைகளையும் உ.வே.சா. அவர்கட்குத் தெரிவித்தனர். உ.வே.சா. உண்மை நிகழ்ச்சிகளை ஆய்ந்து, ஏற்று இந்நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

1902ஆம் ஆண்டு கும்பகோணம் டவுன் ஹாலில் மகாவித்துவானைப்பற்றி மூன்று நாட்கள் உ.வே.சா. அவர்கள் தொடர்ச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

இந்நூலின் முன்னுரை தமிழரனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய தொன்றாகும். இந்நூலின் முன்னுரையில் உள்ள, நம் கண்களைக் குளமாக்கும் ஒரு பகுதியைக் கீழே காண்க.

‘இவர் (மகாவித்துவான்) காலத்தில் படமெடுக்கும் கருவிகள் இருந்தும் இவரோடு பழகியவர்களுள் ஒருவரேனும் இவருடைய படத்தை எடுத்துவைக்க முயலாதது வருத்தத்தை விளைவிக்கிறது. என்னுடைய மனத்தில் இவருடைய வடிவம் இருந்து, அவ்வப்போது ஊக்கம் அளித்து வருகிறது. ஆயினும் பிறர்க்கு அதனைக்காட்டும் ஆற்றல் இல்லாமைக்கு என் செய்வேன்? இக்கவிச்சக்ரவர்த்தியினுடைய பூதவுடம்பின் படம் இல்லையே என்னும் வருத்தம் இருந்தாலும் இவருடைய புகழுடம்பின் படமாக நூல்களும், செய்யுட்கள் முதலியவையும் இருக்கின்றன என்றெண்ணி ஒரு வகையாக ஆறுதல் அடைகிறேன்.’

இப்பகுதியைப் படிக்கும் போது தமிழகம் பெரிய தவறு செய்துவிட்ட உணர்ச்சியுடன் கூடிய சோகம் நம் நெஞ்சையடைக்கிறது.

இந்நூலுள் மகாவித்துவானின் நூற்றுக்கு மேற்பட்ட தனிப்பாடல்கள் வரலாற்றுடன் இடையிடையே பின்னி வருகின்றன.

ஸ்ரீமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்
(இரண்டாம் பாகம்)

மகாவித்துவானின் வரலாறு கூறும் இரண்டாம் பாகமாகிய இந்நூற் பதிப்பு 1934ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. மகாவித்துவானின் வாழ்வின் பெரும் பகுதிச் செய்திகள் முதற் பகுதியிலேயே அடங்கிவிட்டன. அதாவது, 1815 தொடக்கம் 1870 வரை மகா வித்துவானின் வாழ்வு, முதற்பகுதியில் அடங்கி விட்டன. அப்பகுதியில் உ.வே.சா. அவர்கள், கேட்டறிந்த செய்திகள் அடங்கிய பகுதி. இரண்டாம் பகுதியாகிய இஃது, உ.வே.சா. அவர்கள் தாம் மகா வித்துவானிடம் கல்வி கற்றற் பொருட்டு அவரிடம் சேர்ந்தது முதல், மகா வித்துவான் சிவலோகம் அடைந்தது வரை அமைந்த வரலாற்றுத் தொகுப்பாகும். எனவே, இவ்வரலாற்றுப் பகுதி நேரிற் கண்டறிந்தவற்றின் தொகுதி என்பதால் முதற்பகுதியினும் மிகச் சிறப்பைப் பெறுகிறது.

‘என்னை ஏற்றுக் கொண்டது’ என்பது தொடக்கம். ‘இயல்புகளும் புலமைத் திறனும்’ என்பது முடிய இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. அவற்றால் மகாவித்துவானின் பிற்கால வாழ்வை உ.வே.சா. அவர்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘வேறு சில வரலாறுகள்’ ‘தனிச் செய்யுட்கள்’ ‘பிறர் வரைந்தனுப்பிய கடிதங்கள்’ ‘பாராட்டு’ என்று நான்கு பிற்சேர்க்கைகளும் இந்நூலின் இறுதியில் உள்ளன. இந்நூலின் இறுதியிலும் சிறப்புப் பெயர் அகராதி உண்டு.

கோபாலகிருஷ்ண பாரதியார்

உ.வே.சா. அவர்கள் இசை மரபைச் சார்ந்தவர் என்பதை இந்நூலைப் பார்க்கும்போது நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம். தம்மைத் தமிழுக்கே முற்றிலுமாக ஆட்படுத்திக் கொண்ட ‘தமிழ்த் தாத்தா’ தம் மரபுக்கும் மதிப்பளித்து இந்நூலையும், கனம் கிருஷ்ணையர், மகாவைத்திய நாதையர் என்னும் நூல்களையும் வெளியிட்டிருப்பது நம்மைப் இறும்பூதடையச் செய்கிறது.

சாகித்ய கர்த்தாவும், இசையுலகு, தமிழுலகு ஆகியவற்றில் மிகு புகழ்பெற்ற இசைவாணருமாகிய கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் உ.வே.சா. அவர்கள் இளமைக் காலத்தில் சிறிது இசைப் பயிற்சி பெற்றார்கள். ஆக இந்நூல் உ.வே.சா. அவர்கள் இசையாசிரியரைப் பற்றி எழுதியதென்னலாம்.

இந்நூலில் கோபாலகிருஷ்ண பாரதியின் வரலாற்றின் இடையிடையே அவர்தம் கீர்த்தனங்களில் 33 உள்ளன. நூலின் இறுதியில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் வேறு பதினெட்டுக் கீர்த்தனங்களை இராகப் பெயர்களுடன் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டுள்ளார். அவற்றைத் தொடர்ந்து, கோபால கிருஷ்ண பாரதியார் இயற்றிய திருநீலகண்டர் சரித்திரக் கீர்த்தனங்களும் இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வரலாறு கலைமகள் என்னும் திங்களிதழில் வெளிவந்ததாகும். உ.வே.சா. அவர்கள், கலைமகளில் தாம் எழுதி வெளியிட்ட இக்கட்டுரையை விரிவுபடுத்தி மேலும் பல கீர்த்தனங்களுடன் நூலாக்கி 1930ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கனம் கிருஷ்ணையர்

கனம் என்பது சங்கீத மார்க்கங்களுள் ஒன்று. அந்தக் கன மார்க்கத்தில் சிறந்த புலமையும் திறமையும் பெற்றவராதலால் இவர் கனம் கிருஷ்ணையரென இசை உலகில் அழியாப் புகழ் பெற்றுள்ளார். கனம் கிருஷ்ணையர் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1936ஆம் ஆண்டு வெளியிட்டார். தாம் கலைமகளில் எழுதிய தொடர் கட்டுரையுடன் நிறைய கீர்த்தனங்களும் சேர்த்து, கனம் கிருஷ்ணையர் என இவ்வாறு நூலாக உ.வே.சா. வெளியிட்டார். 64 பக்கங்களில் கிருஷ்ணையரின் வாழ்க்கை கூறப்பெற்றுள்ளது. தொடர்ந்து, 57 பக்கங்களில் கனம் கிருஷ்ணையர் இயற்றிய 57 கீர்த்தனங்களை இராக தாளக் குறிப்புடன் வெளியிட்டுள்ளார். இறுதியில் கனம் கிருஷ்ணையர் கீர்த்தன உருப்படிகளின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கனம் கிருஷ்ணையர் அவர்கள் உ.வே.சா. அவர்களின் தந்தை வழிப்பாட்டியின் அம்மான் என்பது ஈண்டு நினைவுகொள்ளல் தகும். இருப்பினும் இந்நூற்பதிப்பின் முன்னுரையில் கிருஷ்ணையர் அவர்களிடம் காணும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருப்பது இவர்தம் பெருந்தன்மைக்கு மேலுமொரு தக்க சான்றாகும். இசையுலகு மகிழ உ.வே.சா. அளித்த இரண்டாவது நூல் என இதனைக் கூறலாம்.

மகா வைத்யநாதையர்

இவரும் தமிழகத்தில் சிறந்து விளங்கிய இசை வாணர்களுள் ஒருவர். 1844 முதல் 1893 வரை வாழ்ந்தவர். இவரைப்பற்றிய வரலாற்றையும் உ.வே.சா. அவர்கள் கலைமகள் இதழில் தொடர்க் கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் முழு உருவமே இந்நூல். 88 பக்கங்களில் மகாவைத்யநாதையருடைய வாழ்வை விளக்கும் இந்நூல் 1936ஆம் ஆண்டு வெளிவந்தது. இசையுலகுக்கு உ.வே.சா. அவர்கள் காணிக்கையாக வைத்த மூன்றாவது நூல் என இதனைக் கூறலாம்.

நான் கண்டதும் கேட்டதும்

உ.வே.சா. அவர்கள், தம் வாணாளில் தாம் கண்ட கேட்ட சுவையான செய்திகளைக் கட்டுரைகளாகக் கலைமகள், ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், தினமணி ஆகிய இதழ்களில் எழுதினார். இவ்வகைக் கட்டுரைகள் பரவாலாகச் செல்வாக்குப் பெற்றன. சில இதழ்களில் வெளிவந்த இவ்வகையான இவர்தம் கட்டுரைகளையே இவரிடம் அனுமதி பெற்று மற்ற மற்ற இதழாசிரியர்களும் தம்தம் இதழ்களில் எடுத்துப் பதிப்பித்தனர். பல பாட நூல் தொகுப்பாசிரியர்களும் உ.வே.சா. அவர்களின் இத்தகைய கட்டுரைகளை அனுமதி பெற்றுத் தம் தம் தொகுப்புப் பாட நூல்களில் வெளியிட்டனர். இவ்வண்ணம் தமிழகத்தில் மிகு கீர்த்திபெற்று வரும் இக்கட்டுரைகளைத் தனியே நூலாகத் தொகுத்தால் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பைப் பெறலாமெனப் பலரும் வேண்டியதால் உ.வே.சா. அவர்கள் ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில் அக்கட்டுரைகளைத் தொகுத்து 1936ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் உயரிய நகைச்சுவை மிகுதியாக இருக்கும்; சிந்தித்துச் சிரித்து மகிழக் கூடிய செய்திகள் அதிகம்.

இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஆறாவது கட்டுரையாகிய ‘பரிவட்டத்தியானம்’ என்பது சுதேசமித்ரன் ஆண்டு மலரிலும், எட்டாவது கட்டுரையாகிய ‘பரம்பரைக் குணம்’ என்பதும், பன்னிரண்டாவது கட்டுரையாகிய ‘டிங்கினானே’ என்ற கட்டுரையும் ஆனந்தவிகடன் தீபாவளி மலர்களிலும் வெளிவந்தவை. பதினோராவது கட்டுரையாகிய ‘முள்ளால் எழுதிய ஓலை’ என்பது தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. முதற்கட்டுரையாகிய ‘தமிழ் தந்த வளம்’ என்பதும், இரண்டாவது கட்டுரையாகிய ‘வறுமைப் புலி’ என்பதும், மூன்றாவது கட்டுரையாகிய ‘விதியின் திறன்’ என்பதும், நான்காவது கட்டுரையாகிய ‘லாடுலட்டுச்சுமை’ என்பதும், ஐந்தாவது கட்டுரையாகிய ‘பங்கா இழுத்த பாவலர்’ என்பதும், ஏழாவது கட்டுரையாகிய ‘மானங்காத்த மைந்தர்’ என்பதும், ஒன்பதாவது கட்டுரையாகிய ‘வெங்கானூர்க் கோயிற் சிற்பம்’ என்பதும், பத்தாவது கட்டுரையாகிய ‘மருதபாண்டியர்’ என்பதும் ‘கலைமகள்’ இதழில் வெளிவந்தவை.

புதியதும் பழையதும்

இந்நூலின் முதல் பாதிப் பகுதியில் பத்துக் கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் ஐந்து கலைமகள் இதழில் வெளிவந்தவை; எஞ்சிய ஐந்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திர நூலில் வெளியிடப்பெற்ற கருத்துக்களையொட்டிய கட்டுரைகள். இவை பழையன. புதிதாக எழுதப்பெற்ற பத்துக் கட்டுரைகள் நூலின் பின் பாதியில் உள்ளன. அவை புதியன. இந்நூலை ஒன்பான் சுவைகளையும் உள்ளடக்கிய உயர்ந்த உரைநடை நூல் எனக் கூறலாம்; எனினும் இந்நூலுள் நகைச்சுவையே மிகுதியாக உள்ளது.
இந்நூலை 1936ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் முதன்முறையாக வெளியிட்டார். இதன் பிறகு 1969ஆம் ஆண்டுவரை உ.வே.சா. அவர்களின் மகனார் திரு. சா. கலியாணசுந்தர ஐயர் அவர்களாலும், அவர்தம் மகனார் திரு. க. சுப்பிரமணிய ஐயர் அவர்களாலுமாக, பதினொரு முறை இந்நூல் பதிப்பிக்கப்பெற்றுள்ளது என்பதே இந்நூலைத் தமிழர் எவ்வளவு விரும்பிப் போற்றுகின்றனர் என்பதற்கொரு சிறு சான்றாகும்.

திருவள்ளுவரும் திருக்குறளும்

4லி6லி1936 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவர் திருநாள் நடைபெற்றது. அவ்விழாவில் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவே இவ்வாறு நூலுருப் பெற்றது. இந்நூலை, உ.வே.சா. அவர்கள் 1936ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவும் கலைமகள் வெளியீடாக வந்தது.

இந்நூலில் திருவள்ளுவரின் பெருமையும் திருக்குறளின் பெருமையும் ஆதாரங்களுடன் பேசப்பட்டுள்ளது. வள்ளுவர் பல நூற் கல்வி கற்றவர்; புலவர்கள்பால் அன்பு பொருந்தியவர் என்பதற்கெல்லாம் பலப்பல அகச் சான்றுகளை இந்நூலில் தந்துள்ளார். திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய செய்திகள் மட்டுமன்றி உரையாசிரியர்களைப் பற்றியும், குறட் கருத்துகளை எடுத்தாண்ட பழைய நூலாசிரியர்களைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகள் கற்றுணர வேண்டியனவாம்.

நல்லுரைக்கோவை (முதற்பாகம்)

இந்நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. அவை உ.வே.சா. அவர்களால் எழுதப் பெற்று கலைமகள், தனவணிகன், ஆடல் பாடல், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளியிடப் பெற்றவை. ஐந்தாவது கட்டுரையாகிய ‘பண்டைக் காலத்துப் பள்ளிக்கூடங்கள்’ என்பது சர்.எம்.சி.டி. முத்தையா செட்டி உயர்நிலைப் பள்ளியில் உ.வே.சா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம். இத்தொகுப்பு நூலை உ.வே.சா. அவர்கள் 1937ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நல்லுரைக்கோவை (இரண்டாம் பாகம்)

இந்நூலில் உ.வே.சா. அவர்கள் எழுதிய பதினான்கு கட்டுரைகள் உள்ளன. ஆறு கட்டுரைகள் கலைமகளில் வெளிவந்தவை. ‘தமிழ் வளர்ச்சி’ என்ற கட்டுரை தமிழன்பர்கள் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புச் சொற்பொழிவின் திரட்டு. எஞ்சிய ஏழு கட்டுரைகள் தனவணிகன், தினமணி, தாருல் இஸ்லாம், சுதேசமித்திரன், ஜெயபாரதி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இத்தொகுப்பு நூலை உ.வே.சா. அவர்கள் 1937ஆம் ஆண்டு வெளியிட்டார்.

உ.வே.சா. அவர்கள் தாம், தமிழாராய்ச்சியினால் அறிந்த பல செய்திகளை இந்நூலின் கட்டுரைகளில் நிறையக் கொடுத்துள்ளார். மேலும் பல அரிய வரலாற்றுச் செய்திகளும், உயரிய ஆராய்ச்சிக் கருத்துகளும் இந்நூலுள் அடங்கியுள்ளன.

1935ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் கலைமகளில் வெளிவந்த எனது நோக்கம் என்ற கட்டுரை இந்நூலின் முதற் கட்டுரையாக அமைந்துள்ளது. உ.வே.சா. அவர்களின் நல்ல உள்ளத்தைக் காணுதற்கு இக்கட்டுரையை நாம் கட்டாயம் படித்துணரவேண்டும். அக்கட்டுரையில் உள்ள சில தொடர்களைக் கீழே காண்க:லி

‘தமிழ் நூல்களை ஆய்ந்து பயிலவேண்டும்.’

‘அவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் எழுதவும், சொல்லவும் வேண்டும்.’

‘பழைய நூல்களைத் தெளிவாக ஆராய்ந்து உண்மைக் கருத்தை அறிய வேண்டும்.’

‘கற்றவர்களிடத்தில் முறையாகப் பாடம் கேட்க வேண்டும். கேட்டவற்றைச் சிந்தித்து முறையாகப் பாடம் சொல்ல வேண்டும்.’

‘முன்னோர் ஒழுகிவந்த முறையைப் பெரும்பாலும் பின்பற்றுதலே மன ஒருமைக்கு வழியாகும்.’

‘எந்தச் சமயத்தாரோடும், எந்தத் தேசத்தாரோடும் சகோதரபாவத்துடன் ஒற்றுமையாயிருந்து காலங்கழிக்க வேண்டும்.’

‘பிறர் செய்த குற்றத்தை மறந்துவிடுதலும், பலரிடையே எடுத்துக் கூறாமையும், நன்மை பயக்கும்.’

‘சிற்றுதவி செய்தாரையும் மறவாமல் என்றும் நன்றி பாராட்டுதலினின்றும் தவறலாகாது. மனிதனை மனிதனாகச் செய்வது நன்றியறிவேயாகும்.’

‘நன்மையும் தீமையும் கடவுள் நம் வினைக்கேற்ப அமைப்பன என்று எண்ண வேண்டும்.’

லிஇவையும் இவைபோன்ற பல செய்திகளையும் கூறி அக்கட்டுரையின் இறுதியில் ‘இவற்றின்படி நடக்கவே நான் முயன்றுகொண்டு வருகிறேன்’ என எழுதியிருத்தலை, அஃது உலகறிந்த பெருமகனாராகிய பின்பு எழுதியது என்றுணர்ந்து படிக்கும்போது அவரை எப்படிப் புகழ்வது என்று புரியாமல் விழிக்கிறோம்.

நல்லுரைக்கோவை (மூன்றாம் பாகம்)

இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. ஆறு கட்டுரைகள் கலைமகளில் வெளிவந்தவை. ‘பண்டைத் தமிழர் இசையும், இசைக் கருவிகளும்’ என்ற கட்டுரை, கோடைக்கால இசைக் கல்லூரியில் பேசிய சொற்பொழிவின் சுருக்கம். ‘இந்திய இலக்கியக் கழகம்’ என்ற கட்டுரை பாரதிய சாகித்ய பரிஷத்தில் பேசிய சொற்பொழிவின் சுருக்கம். ‘பெண்களின் கடமை’ என்ற கட்டுரை ‘சாரதா மகளிர் சங்க’ மலரில் வெளிவந்தது. ஏனைய கட்டுரைகள் சுதேசமித்திரன், ஜெயபாரதி, ஜோதி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1938ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நல்லுரைக்கோவை (நான்காம் பாகம்)

இந்நூலில் உ.வே.சா. அவர்களின் இருபது கட்டுரைகள் உள்ளன. பன்னிரண்டு கட்டுரைகள் கலைமகள் இதழில் வெளிவந்தவை. ‘பண்டைத் தமிழர்’ என்ற கட்டுரை மன்னார்குடி கௌமார குருகுலத்தில் பேசிய சொற்பெருக்கின் சுருக்கம். எஞ்சியவை அய்மென் சண்முக சங்கத்தார் மலரிலும், தாருல் இஸ்லாம், சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தவிகடன், ஆகிய இதழ்களிலும் வெளிவந்தவை. இந்நூல் 1939ஆம் ஆண்டு வெளிவந்தது.

நினைவு மஞ்சரி

இந்நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்தன. முதற்பாகத்தை 1940ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்களே வெளியிட்டார். இரண்டாம் பாகத்தை அவர் தொகுத்து வைத்திருந்தாரேனும், அவர் காலத்தில் வெளியிட இயலவில்லை. அன்னாரின் திருமகனார் திரு. சா. கலியாண சுந்தரையர் அவர்கள் 1942ஆம் ஆண்டு வெளியிட்டார். இரண்டு பாகங்களிலும் சேர்த்து உ.வே.சா. அவர்கள் எழுதிய 49 கட்டுரைகள் உள்ளன.

முதற்பாகத்தில் 24 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் எட்டுக் கட்டுரைகள் கலைமகளில் வெளிவந்தவை. எஞ்சியவை தினமணி, அனுமான், மணிக்கொடி சில்பஸ்ரீ, ஆனந்த போதினி ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.

இரண்டாம் பாகத்தில் 25 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் ஆறு கட்டுரைகள் கலைமகள் இதழில் வெளிவந்தவை. ‘எது தமிழ்’ என்ற கட்டுரை திருச்சி வானொலியில் பேசியது. ‘சுப்பிரமணிய பாரதியார்’ என்ற கட்டுரை அகில இந்திய காங்கிரசின் பொன் விழாவில் பேசியது. ‘அரிதத்தர் சிவபக்தி’ என்ற கட்டுரை கல்கி இதழில் வெளிவந்தது. இறுதிக் கட்டுரையாகிய ‘மகளிர் கல்வியும் கலைமகள் மேன்மையும்’ என்பது புதுக்கோட்டை சமஸ்தானம் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் கலைமகள் திருக்கோயில் திறப்பு விழாவில் தலைமை வகித்தபோது பேசிய பேச்சாகும். எஞ்சியவை பல இதழ்களில் வந்த கட்டுரைகள்; பல இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள்.

தமிழ்ப்பா மஞ்சரி (இரு பாகங்கள்)

இவ்விரண்டு பாகங்களும் டாக்டர் உ.வே.சா. அவர்கள் வெளியிட்டவையல்ல. உ.வே.சா. அவர்கள் இயற்றியவை. இவ்விரு பாகங்களிலும் உ.வே.சா. அவர்கள் எழுதிய 784 கவிதைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் தொகுத்துத் தலைப்புகளுடன் குறிப்புரைகள் எழுதியவர், இலக்கிய மேதை. வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ஆவார்.

முதற் பகுதியிலுள்ள 343 கவிதைகளும் விநாயகப் பெருமான் துதிகள், முருகன் துதிகள், சிவபெருமான் துதிகள், அம்பிகை துதிகள், சரசுவதி துதிகள் என்னும் ஐந்து பெரும் தலைப்புக்களில் அடக்கக் பெற்றுள்ளன. இப்பகுதிகளில் மடக்கு, திரிபு முதலிய அணி நலங்கள் பொருந்திய பாடல்கள் பல உள்ளன. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் பெரும்பாலானவை உ.வே.சா. அவர்கள் தம் இளமைக் காலத்தில் பாடியவை.

இரண்டாம் பாகத்திலுள்ள பாடல்கள் தனிப்பாடல்கள், மொழி பெயர்ப்புப் பாடல்கள், பதிப்புப் பாடல்கள், திருத்தொண்டர்களைப் பற்றிய பாடல்கள், உடன் பழகியவர்களைப் பற்றிய பாடல்கள், நூற்சிறப்புப் பாயிரங்களாக இயற்றிய பாடல்கள் என்ற ஆறு பெரும் பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. இவ்விரண்டாம் தொகுப்பின் முன்னுரையில் வாகீச கலாநிதி அவர்கள் உ.வே.சா. அவர்களின் கவிதைகளைப் பற்றியதொரு சுவையான சிற்றாராய்ச்சியுரை நல்கியுள்ளார்கள். அஃது அளவிற் சிறியதேயொழிய முழுமைக்குப் பெரும் குறைவு உடையதன்று. அவ்வாராய்ச்சியின் முடிவுகள் அனைத்தும் உண்மையும் திண்மையும் உடையனவாகும்.

இவ்விரு பாகங்களையும் பதிப்பித்து உதவியவர்கள் சென்னை அடையாறில் உள்ள மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையத்தினர் ஆவர். முதற்பாகம் மேற்படி நூல் நிலையத்தின் 26ஆவது வெளியீடாக 1961இல் வெளிவந்தது. இரண்டாம் பாகம் மேற்படி நூல் நிலையத்தின் 27ஆவது வெளியீடாக 1962 இல் வெளிவந்தது.