முகப்பு
  உ.வே.சா வரலாறு
 
  உ.வே.சா பதிப்பித்த, எழுதிய நூல்கள்
 

நூல்நிலையம் பற்றிய தகவல்கள்

  ஊ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’
  உ.வே.சாவின் ஓலைச்சுவடிகள்
  பதிப்புகளும், வெளியீடுகளும்
 

விழாக்கள்

  நூலக ஒளிப்படங்கள்
 
 
 

எதிர்காலத் திட்டங்கள்

  முகவரி
டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு
-- பேராசிரியர் ம.வே. பசுபதி

தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் டாக்டர் உ.வே.சா. என்று கூறுவதில் துளியும் பிழையில்லை. தம் வாணாளில் நூறு அரிய பதிப்புக்கள் செய்து வெளியிட்ட அவரைத் தமிழ்த்தாய் நன்றியுணர்ச்சியுடன் பார்க்கிறாள்.

ஓலைகளில் முடங்கி உலகுக்குப் புலப்படாமற் கிடந்த இலக்கிய இலக்கண நூல்களை அச்சு வாகனத்தில் ஏற்றி அழகிய - பிழையற்ற - ஆராய்ச்சிப் பதிப்புக்களாக வெளியிட்டார்.

முற்கால இலக்கியப்பதிப்புகள்

சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை குறுந்தொகை என்னும் நூல்களை உ.வே.சா அவர்கள் ஆய்ந்து பதிப்பித்துள்ளார்.

சங்க நூல்கள்

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு நூலை 1889ஆம் ஆண்டு உ.வே.சா. அவர்கள் பதிப்பித்தார். இந்நூலையும் தம் வாணாளில் மூன்றுமுறை பதிப்பித்தார். 1918ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் 1931ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது.

இது நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய பதிப்பே. பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, நச்சினார்க்கினியர் வரலாறு, அரும்பத முதலியவற்றின் அகராதி, மேற்கோள்கள் உள்ளிட்ட அடிக் குறிப்புகள் ஆகிய ஆராய்ச்சி உறுப்புகளுடன் இந்நூலை வெளியிட்டார்.

* டாக்டர் உ.வே.சா. அவர்களின் வாழ்வும் தமிழ்த் தொண்டும் என்ற இக்கட்டுரையாளர் 1975ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இவர் பதிப்பிப்பதற்கு முன் இதனுள் முதற்பாட்டாகிய திருமுருகாற்றுப்படையை மட்டும், பாராயணநூல் என்ற அளவில் சைவர் அறிந்திருந்தனர். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் கொண்ட தொகுப்பே பாத்துப்பாட்டு என்று தமிழ் உலகத்திற்குத் துலக்கிய பெருமை இவரையே சாரும்.

இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரைக்கு முன் வேறோர் உரை இருந்திருக்கவேண்டும் என்பதும், பத்துப் பாட்டுகளையும் தொகுத்து ஒரு நூலாக்கியவர்கள் சங்கத்தவர்களே என்பதும் இவர்தம் நுண்ணிய ஆய்வினால் கிடைத்த முடிபுகளிற் சிலவாகும்.

இப்பதிப்புச் செய்ய உ.வே.சா. அவர்கள் பதினோர் ஓலைச் சுவடிகளைப் பார்த்து ஆய்ந்தார். அவற்றுள் மூன்று ஓலைச்சுவடிகளே உரையுடன் பத்துப்பாடல்களையும் கொண்டவை.

பத்துப்பாட்டாரய்ச்சியைத் தொடங்கியதும், உரையுடன் முழுமையும் கூடிய ஓலைச்சுவடி பெறத் திருவாவடுதுறைக்குச் சென்று, அங்கும் கிடைக்காமல், ஆதீனத் தலைவரைத் திருமுகம் தீட்டச்செய்து திருச்செந்தூரிலிருந்து பெற்றதும் எல்லாச் சுவடிகளிலும் குறிஞ்சிப் பாட்டில் சில அடிகள் இல்லாமையைக் கண்டு வருந்தி, அவ்வடிகளை அறிந்து நிறைவுறுத்தத் தருமையாதீனத்திற்குச் சென்று, அங்கிருந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் பார்வையிட்டு அப்பகுதிகளை நிறைவுறுத்தியதும் ஆகிய செய்திகளெல்லாம் தமிழன்னையின் நெஞ்சைக் குளிர்விக்க இவர்பட்ட பாடுகள் என்றே கூறவேண்டும்.

1931ஆம் ஆண்டு மூலமும் குறிப்புரையும், அருஞ்சொல் முதலியவற்றின் அகராதியும் கொண்ட இந்நூற்பதிப்பை உ.வே.சா. அவர்கள் வெளியிட்டார்.

புறநானூறு

இந்நூல் முதன் முறையாக உ.வே.சா. அவர்களால் 1894ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. 16 ஓலைச்சுவடிகளை அரும்பாடுபட்டுத் தேடிப் பெற்று அவற்றை ஒப்பு நோக்கி இந்நூலை வெளியிட்டார். இப்பதிப்பையும் உ.வே.சா. அவர்கள் தம் காலத்தில் மூன்று முறை வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு 1923ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1935ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.

புறநானூறு நூலில் உள்ள ஊர்களை நேரிற் காண விருப்பப்பட்டுப் பலவூர்கட்கும் சென்றார். உ.வே.சா. கரூருக்குச் சென்று அவ்வூரைப் பற்றி அங்கிருந்த வழக்குரைஞர்களைக் கேட்டபோது அவர்கள் ‘இங்குச் சிலரின் பெயர்களுடன் வள்ளல் என்ற அடைமொழியும் உள்ளது’ என்றனராம். வள்ளல் என்ற அடைமொழி பெற்றுள்ள அவர்களெல்லாம் கடையெழு வள்ளல்கள் போன்றோரின் மரபினராகலாம் என உ.வே.சா. கருதினார்.

உ.வே.சா. அவர்கள், புறநானூறு கூறும் செய்திகளை முழுதும் திரட்டி ‘முன்னாளிடையே’ என்ற தொடக்கத்துடன் 54 அடிகள் கொண்டதாக ஆசிரியப்பா ஒன்றை இயற்றி முகவுரைப் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

கிடைத்த ஓலைப் பிரதிகள் ஒன்றிலேனும் இந்நூலின் 267, 268ஆம் பாடல்களின் மூலமேனும், உரையேனும் காணப் பெறவில்லையென்று உ.வே.சா. வருந்துகிறார்.

இயற்றியோர் இன்னார் எனத் தெரியாத பழைய உரையையும் உ.வே.சா. இந்நூற் பதிப்பில் வெளியிட்டுள்ளார். பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, திணை துறைகளின் பட்டியல், அளவைகள், ஆபரண வகை, ஆயுத வகை, ஆறுகள், இடவகை, உடைவகை, உணவு வகை உள்ளிட்ட 62 வகைச் செய்திகளடங்கிய விசேடச் செய்திகள், உரையின் இயல்பு முதலிய சிறப்பு ஆராய்ச்சிக் குறிப்புகள் ஆகியவை 100 பக்க அளவில் வரைந்துள்ளார். 72 பக்க அளவில் அரும்பத முதலியவற்றின் அகராதி திரட்டிப் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார். இச்சிறப்புப் பகுதிகள் அனைத்தும் முதற் பதிப்பிலேயே வெளிவந்தன அல்ல.

புறநானூறு ஓலைப் பிரதிகள் இருந்த நிலையைக் கீழ்வருமாறு உ.வே.சா. கூறுகிறார் :

‘உரையில்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும், குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி இவற்றுள் சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும், சிலவற்றின் பின் துறையெழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டுமெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும், சிலவற்றின் பின் பாடப்பட்டோர் பெயர் சிதைந்தும், சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும், சில பாடல்கள் இரண்டிடத்து எழுதப்பெற்று இரண்டு எண்களை ஏற்றும், வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை ஏற்றும், சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும், சில முற்றும் இன்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடலின் அடிகளோடு கலந்தும், ஓரடியே ஒரு பாட்டுள் சிலவிடத்து வரப்பெற்றும் பொருளுண்மை காணாவண்ணம் இன்னும் பல வகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகளில் இருந்தன.’

இக் குறைகளை எல்லாம் களைவதற்கு உ.வே.சா. என்ன பாடுபட்டிருப்பார் என்றெண்ணும்போது அந்தப் பேருழைப்பு நம்மைத் திகைக்க வைக்கிறது.

1936ஆம் ஆண்டு மூலம் மட்டும் கொண்ட புறநானூறு பதிப்பை உ.வே.சா. வெளியிட்டார். மூலத்துக்குமட்டுமான அரும்பத முதலியவற்றின் அகராதியை இப்பதிப்புக்கென உண்டாக்கி வெளியிட்டார்.

ஐங்குறுநூறு

எட்டுத் தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு என்னும் நூல் 1903ஆம் ஆண்டு முதன்முறையாக உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது. இந்நூலைப் பதிப்பிக்க உ.வே.சா அவர்களுக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளில் நான்கு ஓலைச் சுவடிகளே பயன்தந்தன. அவற்றிலும் ஓர் ஓலைச் சுவடியில்தான் பழைய உரை இருந்தது. அதனை உ.வே.சா. அவர்கட்குத் தந்தவர் தே. லக்ஷ்மணக் கவிராயர் என்பவர். எஞ்சிய மூன்று ஓலைச் சுவடிகளும் மூலம் மட்டுமே கொண்டவை.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார் வரலாற்றையும், இந்நூலின் முதல் நூறாகிய மருதத்தைப் பாடிய ஓரம்போகியார் வரலாற்றையும், இராண்டாம் நூறாகிய நெய்தலைப் பாடிய அம்மூவனார் வரலாற்றையும், மூன்றாம் நூறாகிய குறிஞ்சியைப் பாடிய கபிலர் வரலாற்றையும், நான்காம் நூறாகிய பாலையைப் பாடிய ஓதலாந்தையார் வரலாற்றையும், ஐந்தாம் நூறாகிய முல்லையைப்பாடிய பேயனார் வரலாற்றையும், இந்நூலைத் தொகுத்தவராகக் கருதப்பெறும் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் வரலாற்றையும், தொகுப்பித்தவராகக் கருதப்பெறும் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வரலாற்றையும் உ.வே.சா. அவர்கள் ஆய்ந்தெழுதி இந்நூலின் முற்பகுதியில் சேர்த்துள்ளார். இந்நூலின் பாக்களையும், தொடர்களையும் மற்றையோர் எவ்வெவ்விடங்களில் எடுத்தாண்டுள்ளனர் என்பதைத் தெளிவுசெய்யும் பிரயோக விளக்கம் என்னும் அட்டவணையையும் தயாரித்து இப்பதிப்பின் இறுதியில் வெளியிட்டுள்ளார். அரும்பத முதலியவற்றின் அகராதியும் இப்பதிப்பிற்கு உண்டு.

இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1920ஆம் ஆண்டில் வெளிவந்தது.
இந்நூலின் பழைய உரையினை இன்னார் எழுதினார் என்று புலப்படவில்லை. உரையின் நடையினை நோக்கிப் பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய மூவருள் ஒருவர் இப்பழைய உரையை யாத்தவராகலாம் என உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளமையைத் தமிழுலகம் மேலும் ஆராய்ச்சி செய்து முடிவெடுக்க வேண்டும்.

பதிற்றுப் பத்து

எட்டுத் தொகையுள் நான்காவது நூலாகிய பதிற்றுப்பத்து என்னும் நூலினை 1904ஆம் ஆண்டு உ.வே.சா. வெளியிட்டார். எழுதியவர் பெயர் தெரியாத பழைய உரையினையும் மூலத்துடன் வெளியிட்டார். உ.வே.சா. அவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் இந்நூலின் கடவுள் வாழ்த்தும், முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை.

இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1920ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும், 1941ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் பதிப்பித்தார்.

தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியல் உரையில் கடவுள் வாழ்த்துக்கு நச்சினார்க்கினியர் தரும் எடுத்துக்காட்டாகிய ‘எரியெள்ளு வன்ன’ எனத் தொடங்கும் பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாமென்றும், அப்பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆகலாம் என்றும் பிறர் கருதுவர்.

அரிதின் முயன்று பெற்ற பதிற்றுப்பத்தின் பல ஓலைப் பிரதிகளுள் ஆறு ஓலைப் பிரதிகளே இவர்தம் ஆராய்ச்சிக்குப் பயன்பட்டன. அவற்றுள்ளும் இரண்டு பிரதிகளில்தான் பழைய உரை இருந்தது. எஞ்சிய பிரதிகள் மூலம் மட்டிலுமே கொண்டவை.

மூன்றாம் பதிப்பில் இந்நூலை மேலும் எளிமையாக்குவதற்காக உ.வே.சா. அவர்கள் தாமே குறிப்புரை இயற்றி வெளியிட்டார்.
மூன்றாம் பதிப்பின் முன்னுரையில், ‘இத்தகைய நூல்களோடு பழகுகையில் எனக்கு ஊக்கமும், உலகத்தை மறந்துவிடும் நிலையும் உண்டாகின்றன’ என்று உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள தொடர் நம் கவனத்தைக் கவர்கின்றன.

பாடினோர் வரலாறு, அரும்பத முதலியவற்றின் அகராதி ஆகிய சிறப்புப் பகுதிகள் இந்நூற் பதிப்புகளிலும் உள.

பரிபாடல்

இந்நூலை முதன் முறையாக உ.வே.சா. அவர்கள் 1918ஆம் ஆண்டு வெளியிட்டார். பரிபாட்டென்றும் இந்நூலுக்கு ஒரு பெயர் உண்டு. பரிமேலழகரின் உரையுடன் இந்நூற் பதிப்பு வெளிவந்தது.

பரிபாடல் என்பது இசைப் பாடல். பரிபாடல் என்பதற்கு, ‘தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் பாடல்’ என விளக்கம் தருவார் நச்சினார்க்கினியர்.

இந்நூலுட் காணப்பெறும் 22 பாடல்களுள் திருமாலுக்குரியவை ஆறு; முருகக் கடவுளுக்குரியவை எட்டு; இப்பதினான்கும் தெய்வ வாழ்த்து என்னும் வகையைச் சார்ந்த இசைப்பாடல்கள். வையைக் குரியவை எட்டுப் பாடல்கள். மலை விளையாட்டு, புனல் விளையாட்டு என்ற காமப் பொருள் குறிக்கும் பகுதிகள் நூல் முழுவதிலுமாக விரவி வந்துள்ளன.

இந்நூலின் ஓலைப் பிரதிகளில் காணப்பெறாதனவும், பண்டை உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பெற்றனவும், புறத்திரட்டில் காணப்பெறுவனவும் ஆகிய பாடல்களை இந்நூற்பதிப்பின் இறுதியில் உ.வே.சா. சேர்த்துள்ளார். இப்பகுதிக்குப் பரிமேலழகர் உரை கிடையாது.

நூல் முழுமைக்கும் இன்றியமையாத குறிப்புகளும், ஐம்பது பக்க அளவில் பொருட் சுருக்கமும் (பிற்பகுதியிலுள்ள திரட்டின் பகுதிக்கும் இப்பகுதியில் பொருட் சுருக்கம் உண்டு) பாடினோர் வரலாறும் (நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இளவெயினனார், கரும்பிள்ளைப் பூதனார், கீரந்தையார், குன்றம் பூதனார், கேசவனார், நப்பண்ணனார், நல்லச்சுதனார், நல்லழுசியார், நல்லெழுனியார், நல்வழுதியார், மையோடக்கோவனார் என்னும் 13 புலவர்களின் வரலாறு) இசை வகுத்தோர் வரலாறும் (கண்ணகனார், கண்ணன்நாகனார், கேசவனார், நந்நாகனார், நல்லச்சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார் என்னும் 10 இசைவாணர்கள் பற்றிய குறிப்பு), சிறந்த பாகங்கள் என்னும் தொகுப்பும், பரிமேலழகர் வரலாறும், அரும்பத முதலியவற்றின் அகராதியும் ஆகிய சிறப்புப் பகுதிகளை உ.வே.சா. இந்நூற் பதிப்புள் வெளியிட்டுள்ளார். விசேடக் குறிப்பு, தொல்காப்பியம் தெய்வச் சிலையார் உரையில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்ட இந்நூற் பகுதிகளும் இடமும் என்ற சிறப்புப் பகுதிகள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டவை. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1935ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.

குறுந்தொகை

உ.வே.சா. அவர்கள் எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை 401 பாடல்களுக்கும் பதவுரை விசேடவுரை எழுதி 1937ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

சுவையான செய்திகளுடன் கூடிய செறிவான முன்னுரையும், பொருள்கள், அன்பைப் பற்றியன, உபகாரிகள் (அகுதை, அஞ்சி, அதிகன், அருமன், அழிசி, ஆய், எவ்வி, எழினி, ஓரி, கட்டி, குட்டுவன், கொங்கர், கோசர், சேந்தன், தொண்டையர், நள்ளி, நன்னன், பசும்பூட் பாண்டியன், பாரி, பூழியர், பொறையர், மலையன், வடுகர், விச்சிக்கோ, வேளிர் என்னும் 25 புரவலர்களைப் பற்றிய குறிப்புகள்), இடங்கள், மக்கள் வாழ்க்கை நிலை, (அரசியல், ஊரமைப்பு, அறம், பொருள், சாதிகள், ஆடவர், மகளிர், நிமித்தங்கள், வழக்கங்கள், கருவிகள், ஊர்திகள், உணவு வகை, உரை, நீதி என்னும் 14 வகைச் செய்திகள்), இலக்கணச் செய்திகள் ஆகியவைகளைக் கொண்ட முக்கியமான செய்திகள் என்ற ஆராய்ச்சிப்பகுதியும், 60 பக்கங்களில் இந்நூலிற் பாடிய 205 புலவர்களைப் பற்றிய வரலாறும், 80 பக்கங்கள் கொண்ட அரும்பத முதலியவற்றின் அகராதியும் இந்நூற்பதிப்பின் உயர்வைத் தெளிவுடன் விளக்குகின்றன.

‘இத்தொகை முடித்தான் பூரிக்கோ’ என ஓலைகளிற் காணப்பட்டனவாம். இப் பூரிக்கோவைப் பற்றிய செய்தி ஏதும் தெரிந்திலது. இந்நூலுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்றும், அவர் இருபது செய்யுட்களுக்கு மட்டும் உரை எழுதவில்லை என்றும், அவற்றிற்கு நச்சினார்கினியர் உரையெழுதினார் என்றும் உ.வே.சா. அவர்கள் பல சான்றுகள் தந்து இந்நூற் பதிப்பின் முன்னுரையில் நிறுவுகிறார். ‘இங்ஙனம் மிகச் சிறந்த இரண்டு உரையாசிரியர்களாலும் எழுதப்பட்ட பழைய உரை இப்பொழுது கிடைக்கவில்லை; இது தமிழர்களுக்கு நேர்ந்ததொரு பெரிய நஷ்டமேயாகும்’ என உ.வே.சா. கூறுவது சிந்திக்கத் தக்கதாகும்.